Print Version|Feedback
Europe and America clash over Washington’s economic war on Iran
ஈரான் மீதான வாஷிங்டனின் பொருளாதாரப் போர் தொடர்பாக ஐரோப்பாவும் அமெரிக்காவும் மோதல் காண்கின்றன
By Keith Jones
5 November 2018
ஈரானின் பொருளாதாரத்தை மூச்சுத்திணறடிக்கவும் அங்கு ஆட்சி மாற்றத்தை உண்டாக்கவுமான நோக்கத்துடன் வாஷிங்டன் ஈரான் மீது மிகப்பெருமளவில் புதிய தடைகளை விதித்திருப்பது உலக புவியரசியலை மீண்டும் கொதியூட்டிக் கொண்டிருக்கிறது.
இன்றைய நிலவரப்படி, அமெரிக்கா ஈரானின் அனைத்து எரிசக்தி ஏற்றுமதிகள் மீதும் தடை விதிப்பதோடு அதன் எஞ்சிய வர்த்தகத்தையும் முடக்குவதற்கும் எந்திரங்கள், உதிரிப்பாகங்கள், இன்னும் அடிப்படையான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கும் கூட அதற்கு அணுகல் இல்லாமல் ஆக்குவதற்காகவும் அமெரிக்க-மேலாதிக்கத்திலான உலக நிதிய அமைப்புமுறையில் இருந்தும் ஈரானை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது.
இதன் மூலமாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் மறுபடியும் ஒருமுறை சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்கிறது. இந்தத் தடைகள் அப்பட்டமாய் சட்டவிரோதமானவை என்பதோடு சர்வதேசச் சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட போர் அறிவிப்புக்கு நிகரானதாகும். இவை ஐ.நா பாதுகாப்பு சபையின் ஆதரவுடனான 2015 ஈரான் அணு ஒப்பந்தத்தையோ அல்லது வாஷிங்டனின் கட்டளையிலும் போர் மிரட்டல்கள் உள்ளிட்ட அதன் வலுக்கட்டாயத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட உடன்படிக்கையான இணைந்த விரிவான செயல் நடவடிக்கை திட்டத்தையோ (JCPOA) மீறியவையாக உள்ளன.
JCPOA இல் பங்குபெற்றிருக்கும் மற்ற அத்தனை தரப்புகளும் (ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்) அத்துடன் ஈரான் சரியாக பின்பற்றுகிறதா என்பதை சரிபார்க்கும் பொறுப்பு சுமத்தப்பட்டிருந்த சர்வதேச அணு சக்தி முகமையும், ஈரான், ஒப்பந்தத்திற்கு அட்சரம் பிசகாமல் தனது பொறுப்புகளை நிறைவேற்றியிருப்பதாக பிடிவாதமாகக் கூறிவருகின்றன. அதன் ஆக்கபூர்வ அணுசக்தி வேலைத்திட்டத்தின் பெரும்பகுதியை அகற்றுவது மற்றும் எஞ்சியவற்றின் செயல்பாட்டைக் குறைப்பது ஆகியவையும் இதில் அடங்கும்.
இருந்தும், வாஷிங்டன், JCPOAக்கான அதன் ஆதரவை விட்டு விலகி ஓடியிருப்பதுடன், இப்போது அதன் சட்டவிரோதமான முற்றுகையில் இணைந்து கொள்ளச் செய்வதற்காகவும் அதன் ஆட்சி-மாற்றத் தாக்குதலில் உடந்தையாக இருப்பதற்காகவும் உலகின் மற்ற நாடுகளை நிர்ப்பந்திக்கும் பொருட்டு இரண்டாம் நிலைத் தடைகள் என்னும் தடியை பிரயோகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஈரானுடன் வர்த்தகம் செய்கின்ற நிறுவனங்கள் மற்றும் நாடுகள் அல்லது அவற்றுடன் வர்த்தகம் செய்கின்றவையும் கூட அமெரிக்க சந்தையில் இருந்து விலக்கி வைக்கப்படும் என்பதுடன் பாரிய அபராதங்களுக்கும் மற்ற தண்டத்தொகைகளுக்கும் இலக்காக்கப்படும். இதேபோல, ஈரானுடன் அல்லது ஈரானுடன் வர்த்தகத்திற்கு வழிதருகின்ற மற்ற நிதி நிறுவனங்களுடனும் கூட வர்த்தகம் செய்கின்ற நிறுவனங்களுடன் எந்த பரிவர்த்தனைகளும் கொண்டிருக்கின்ற வங்கிகள் அல்லது சரக்குப் போக்குவரத்துக் காப்பீடு நிறுவனங்கள் தண்டிப்பான அமெரிக்க இரண்டாம் நிலை தடைகளுக்கு உள்ளாக்கப்படும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போலவே ஈரானைத் தாக்குவதற்கு தொடர்ந்து மிரட்டி வந்திருப்பவரும் சிரியாவில் உள்ள ஈரானிய இஸ்லாமிக் புரட்சிக் காவல் படையினர் மீது இராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டவருமான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு அமெரிக்கத் தடைகளை “வரலாற்றுச்சிறப்பானவை” என்று பாராட்டியிருக்கிறார். சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரண்டு மற்ற அமெரிக்காவின் எடுபிடி அரசுகள், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளின் மீது அமெரிக்கா விதிக்கின்ற தடைகளால் உண்டாகும் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உறுதிபூண்டிருக்கின்றன.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரப் போரானது மத்திய கிழக்கில் பதட்டங்களை அதிகரிப்பதுடன் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் ஏனைய பெரிய சக்திகளுக்கும் -குறிப்பாக ஐரோப்பா- இடையிலான உறவுகளையும் உளைச்சலடையச் செய்து கொண்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமையன்று, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவரான ஃபிரெடரிகா மொகேரீனியும் விடுத்த ஒரு அறிக்கை JCPOAக்கு அவர்களது ஆதரவை மறுஉறுதி செய்வதோடு அமெரிக்கத் தடைகளை ஒதுக்கிக் கடந்து செல்லவும் மீறவும் சூளுரைக்கிறது. “ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231க்கும் இணங்க ஈரானுடன் முறையான வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் ஐரோப்பிய பொருளாதார செயல்பாட்டாளர்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கமாகும்” என்று அவர்கள் அறிவித்தனர்.
ஈரான் தொடர்ந்தும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்வதற்கு வழிதரக் கூடிய விதத்தில் அதனுடனான “நிதி வழிகளை” பாதுகாப்பதற்கும், அதைச் செய்வதற்கு “JCPOA ஐ ஆதரிப்பதில் ஆர்வம்கொண்ட” ரஷ்யா, சீனா மற்றும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து வேலைசெய்வதற்குமான தமது உறுதிப்பாட்டை அவை அறிவித்தன.
“நியாயமான வர்த்தகத்தை பின்தொடர்வதற்கும்” அது தொடர்பாக, ஐரோப்பிய வணிகங்களும் மற்ற நாடுகளும் -இதில் ரஷ்யா மற்றும் சீனா இடம்பெறுவதும் சாத்தியம்- யூரோவை அல்லது அமெரிக்க மேலாதிக்கத்திலான உலக நிதி அமைப்புமுறைக்கு வெளியிலான அமெரிக்க டாலர் சாராத பணப்பரிவர்த்தனை ஊடகத்தைக் கொண்டு ஈரானுடன் வணிகம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்கின்ற ஒரு சிறப்பு நோக்க வாகனம் (SPV) ஒன்றை உருவாக்குவதைக் கொண்டு முன்னேறுவதற்குமான தமது உரிமையை நிலைநாட்டுவதில் ஐரோப்பிய சக்திகள் “அசைந்துகொடுக்காத கூட்டான மனஉறுதி” கொண்டுள்ளதாக அந்த அறிக்கை வலியுறுத்தியது.
வெள்ளியன்றான அறிக்கையானது ட்ரம்ப், வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோ மற்றும் நிர்வாகத்தின் பிற உயரதிகாரிகள் நாளின் முந்தைய சமயத்தில் விடுத்திருந்த வரிசையான மிரட்டும் அறிவிப்புகளுக்கான ஒரு பதிலிறுப்பாக இருந்தது. அவை புதிய அமெரிக்கத் தடைகளை கட்டவிழ்த்து விட்டிருந்ததோடு ஈரானின் பொருளாதாரத்தை நொருக்குவதற்கும் அமெரிக்கத் தடைகளுக்கு இணங்கி நடக்கத் தவறுகின்ற எந்த நிறுவனத்தின் அல்லது நாட்டின் மீதும் மூர்க்கமாக தடைகளைப் பின்பற்றுவதற்கும் மறுவலியுறுத்தம் செய்தன.
ஐரோப்பிய சிறப்பு நோக்க வாகனம் (SPV) குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க கருவூலச் செயலரான ஸ்டீவன் ம்னுசின், அது “கணிசமான” வர்த்தகத்திற்கான ஒரு பாதையாக ஆகும் என தான் ”கருதவில்லை” என்றார். “ஆயினும் எங்களது தடைகளை ஏய்க்கும் நோக்குடனான பரிவர்த்தனைகள் இருக்குமானால், எங்களது நிவர்த்திமுறைகளை நாங்கள் அப்போது தீவிரமாகப் பின்பற்றுவோம்.”
வங்கிகளுக்கு இடையிலான தகவல்தொடர்புகளுக்கு வழிதரும் புரூசெல்ஸை அடிப்படையாகக் கொண்ட SWIFT வலைப்பின்னலும் மற்றும் அதன் இயக்குநர்களின் பெரும்பான்மையோரைக் கொண்ட ஐரோப்பிய வங்கிகளும் வலைப்பின்னலில் இருந்து ஈரான் நிதி நிறுவனங்கள் அத்தனையையும் விரைவாக அவை வெளியேற்றாவிட்டால் அவற்றின் மீதும் தடை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் ட்ரம்ப்பின் அதிகாரிகள் விடுத்தனர்.
ஐரோப்பாவுக்கு அமெரிக்கா காட்டுகின்ற அலட்சியத்தை விளங்க அடிக்கோடிட்டுக் காட்டுகிற நோக்கத்துடனான ஒரு நடவடிக்கையில், ட்ரம்ப் நிர்வாகம், ஈரான் எண்ணெய் இறக்குமதிகள் மீதான அமெரிக்கத் தடைகளை முழுதாக செயலுறுத்துவதன் மீது தற்காலிக விலக்கு வழங்கப்படுகின்ற எட்டு நாடுகளில் எந்த ஐரோப்பிய நாட்டையும் சேர்க்கவில்லை.
இலாப வெறியில் ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அமெரிக்காவுக்கு சற்றும் சளைத்தவையல்ல. ஐரோப்பாவின் பெரும் சக்திகள் வெறித்தனமாக மறுஆயுதபாணியாகிக் கொண்டிருப்பதோடு, ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர்ப் பெருக்கத்தின் கூர்முனையாகவும் உதவியிருக்கின்றன. கடந்த மூன்று தசாப்தங்களில் அவை ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா தொடங்கி மாலி வரையிலும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் ஏராளமான போர்கள் மற்றும் நவ-காலனித்துவ தலையீடுகளை நிகழ்த்தி வந்திருக்கின்றன.
ஆனால் ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் பொறுப்பற்றதும் ஆத்திரமூட்டக்கூடியதுமான தாக்குதலுக்கு அவை எதிர்ப்பு தெரிவிக்கின்றன, அதன் பின்விளைவுகளைக் குறித்து அஞ்சுகின்றன. அவை எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணம், அணு ஒப்பந்தத்தை வாஷிங்டன் உடைத்து நொருக்குவதென்பது, ஈரானின் உள்நாட்டுச் சந்தையில் ஒரு முன்னிலை நிலையைப் பிடிப்பதற்கும் பாரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சலுகைகளை ஈரான் அளிப்பதை சுரண்டிக் கொள்வதற்குமான ஐரோப்பிய மூலதனத்தின் திட்டங்களை அது காலை வாருகிறது என்பதாலாகும். ஈரானுடனான அமெரிக்காவின் மோதலானது ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் பரவலாக பற்றியெரியச் செய்யத்தக்க, ஒரு புதிய அகதிகள் நெருக்கடியையும், எண்ணெய் விலைகளில் ஒரு பாரிய அதிகரிப்பையும் அத்துடன் இறுதியாக ஆனாலும் முக்கியத்துவத்தில் சளைக்காததாய், ஐரோப்பிய சக்திகள் சுதந்திரமாக முடிவை தீர்மானிக்குமளவுக்கு இன்னும் போதுமான இராணுவ வலிமையை பெற்றிருக்காத நிலைமைகளின் கீழ் பிராந்தியத்தின் ஒரு மறுபிரிவினையையும் தூண்டக்கூடிய ஒரு போரை பற்றவைக்க அச்சுறுத்துகிறது என்ற காரணத்தால் அவை அதனைக் கண்டு அஞ்சுகின்றன.
இன்றுவரை, அமெரிக்கத் தடைகளை நோக்கிய ஐரோப்பிய எதிர்ப்புச் சூளுரைகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் ஒரு விதமான அலட்சியமான, இன்னும் சொன்னால், ஆணவமான மனோபாவத்தையே கொண்டிருந்து வந்திருக்கிறது. ஏராளமான ஐரோப்பிய வணிகங்கள் அமெரிக்கத் தடைகளை மீறுவதால் விளையக் கூடிய நட்டங்களுக்குப் பயந்து ஈரானுடனான தமது உறவுகளைத் துண்டித்து தமது அபிப்ராயத்தை வெளிப்படுத்தி விட்டிருக்கின்றன என்ற உண்மையால், நிர்வாகத்தின் தலைமையில் இருக்கும் ட்ரம்ப்பும் பொம்பியோ மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்டான் போன்ற ஏனைய ஈரான் போர்ப் பருந்துகளும், மிதப்பில் இருக்கின்றனர்.
அமெரிக்க பதிலடிகளுக்கு அஞ்சி, சமீபத்திய ஐரோப்பிய ஒன்றிய அறிக்கைகளின் படி புத்தாண்டு வரை செயல்பாட்டுக்கும் கூட வரவிருக்காத SPVக்கு இடமளிக்கவும் கூட எந்த ஐரோப்பிய அரசும் உடன்பட்டிருக்கவில்லை என்று சென்ற வாரத்தில் ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
ஐரோப்பாவின் சிரமங்களும் தயக்கங்களும் உண்மையானவை. ஆனால் அவை இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் புவியரசியல் மாற்றங்களின் அளவில்பெரிய தன்மையையும் மற்றும் வெடிப்பான தன்மையையும் கூறுவனவாய் இருக்கின்றன.
அடுத்த சில வணிகக் காலாண்டுகளுக்கான சந்தை பங்களிப்பையும் முதலீட்டாளர் இலாபத்தையும் அதிகப்படுத்துவதன் மீது கவனம் குவித்திருக்கின்ற ஐரோப்பிய பெருநிறுவனத் தலைவர்கள் அமெரிக்காவின் தடைகளது மிரட்டலுக்கு தலைவணங்கியிருக்கின்ற அதேவேளையில், ஏகாதிபத்திய மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அமல்படுத்துவதற்கும் பொறுப்பு கொண்ட அரசியல் தலைவர்கள், வாஷிங்டனுக்கு எதிராய் தாங்கள் நெருக்கிப் பின்தள்ள வேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கின்றனர்.
இது ஈரான் குறித்ததாக மட்டுமல்லாமல், ஒருதலைப்பட்சமான தடைகளைப் பயன்படுத்தி நோர்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தை (பால்டிக் கடலின் கீழே ஜேர்மனிக்கு ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவைக் கொண்டுவருகிற எரிவாயுக் குழாய் திட்டம், இத்திட்டத்தை ட்ரம்ப் தொடர்ந்து கண்டனம் செய்து வந்திருக்கிறார்) முறியடிக்க முனைவது உள்ளிட ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா கட்டளையிடாமல் தடுப்பதற்கான வழிவகையை அபிவிருத்தி செய்வது குறித்ததாகவும் இருக்கிறது.
ஒருதரப்பான தடைகளை திணிப்பதற்கான அமெரிக்காவின் திறன் என்பது உலக பொது நாணயமதிப்பாக அமெரிக்க டாலரின் பாத்திரம் மற்றும் உலக வங்கியமைப்பில் அமெரிக்காவின் மேலாதிக்கம் ஆகியவற்றைச் சார்ந்திருக்கிறது என்பதால், அமெரிக்கத் தடைகளுக்கான ஐரோப்பாவின் சவால் என்பது அத்தியாவசியமாக அமெரிக்காவின் உலகளாவிய சக்தியின் இந்த முக்கிய கூறுகளுக்கு சவால் விடுவதைக் கொண்டதாயிருக்கிறது.
ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், மற்ற பெரும் சக்திகளைப் போலவே, உலக முதலாளித்துவத்தின் ஒரு அமைப்புமுறை பொறிவு நிலைமைகளின் கீழ் சந்தைகளுக்கும், இலாபங்களுக்கும் மூலோபாய அனுகூலத்திற்குமான ஒரு வெறிகொண்ட சண்டையில் மாட்டிக் கொண்டிருக்கின்றன என்பதால் அவை இந்த பாதையை எடுக்கின்றன. ஒருபக்கத்தில் புதிய சக்திகளின் எழுச்சிக்கும் மறுபக்கத்தில் தனது பொருளாதார வலிமையின் தேய்வை சரிக்கட்ட முன்னெப்போதினும் அதிகமாய் போரை நம்பியிருக்கிறதும் அத்துடன் எதிரிகள் மற்றும் வெளித்தோற்ற நண்பர்கள் இரண்டின் நலன்களையுமே ஒரேபோல பலிகொடுத்து தனது சொந்த நலன்களை தாட்சண்யமற்று பின்தொடர்கின்றதுமான அமெரிக்காவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தங்களைக் காண்கின்ற ஐரோப்பிய நாடுகள், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் தலைமையில், தமது சொந்த வேட்டை நலன்களைத் திட்டவட்டம் செய்வதற்கு அமெரிக்காவில் இருந்து சுயாதீனப்பட்டதும், அவசியமாகும் போது அதற்கு எதிரானதாகவுமான பொருளாதார மற்றும் இராணுவ வழிவகைகளை அபிவிருத்தி செய்வதற்கு விழைந்து கொண்டிருக்கின்றன.
SPV ஐ உருவாக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இது நன்கு தெரியும், இது ஈரானுக்காக சிறப்பாக உருவாக்கப்படுவதல்ல என்பதை அவர்கள் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஆணையத் தலைவரான ஜோன்-குளோட் ஜூங்கர் தனது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான உரையைப் பயன்படுத்தி யூரோ இன்னும் பெரியதொரு உலகளாவிய பாத்திரத்தை வகிக்கின்றதை உறுதிசெய்கின்ற நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருந்த ஒரு சில வாரங்களின் பின்னர், சென்ற மாதத்தில் பேசிய பிரான்சின் நிதி அமைச்சரான புரூனோ லு மேர், “ஈரானுடனான நெருக்கடி”, “நாம் விரும்புகிற யாருடனும் வேண்டுமானாலும் நாம் வர்த்தகம் செய்யக் கூடிய விதத்தில் ஐரோப்பா அதன் சொந்த சுயாதீனமான நிதி நிறுவனங்களைக் கொண்டிருப்பதற்கான ஒரு வாய்ப்பினை” உருவாக்கித் தந்திருப்பதாக அறிவித்தார். SPV, "வருங்காலத்தில் சட்டவிரோதமான பிராந்தியம்கடந்த தடைகளின் விளைவுகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களைப் பாதுகாக்கக் கூடிய விதத்திலான... ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு பொருளாதார இறையாண்மை சாதனத்தை உருவாக்க நோக்கம் கொண்டிருக்கிறது” என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் Agnes Von der Muhl மேலும் சேர்த்துக் கொண்டார்.
SPV ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் கொள்கைக்கானதை விடவும் அதிகமானதொரு நோக்கத்துடனான ஒரு சவால் என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் நன்கறிந்துள்ளனர். ஒபாமா நிர்வாகத்தின் முன்னாள் அதிகாரியான எலிசபெத் ரோஸன்பேர்க் சென்ற மாதத்தில் வெளியுறவு விவகாரங்கள் இதழில் (Foreign Affairs) எழுதுகையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒருதரப்பான தடைகள் ஐரோப்பிய ஒன்றியம் வாஷிங்டனை மீறுவதில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் சேர்ந்து வேலை செய்யக் காரணமாகிக் கொண்டிருப்பது குறித்தும், அமெரிக்க நிதி மேலாதிக்கத்திற்கு ஒரு ஐரோப்பிய சவாலை தூண்டிக் கொண்டிருப்பது குறித்தும் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தினார். ரஷ்யாவும் சீனாவும் ஏற்கனவே மேற்கத்திய வங்கிகளை விலகிக் கடந்து செல்கின்ற பணச்செலுத்த முறைகளை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றன, அத்துடன் டாலர் மேலாதிக்கத்திற்கும் அமெரிக்க-தலைமையிலான உலகளாவிய நிதி அமைப்புமுறைக்கும் மேலதிக சவால்களுக்கு வருங்காலம் உறுதியளிக்கிறது, இந்நிலைமைகளில் “அமெரிக்கா இந்தப் போக்கினை துரிதப்படுத்துவது” “கவலை தருவதாய் இருக்கிறது” என்று ரோஸன்பேர்க் புலம்பினார்.
ஈரானின் பொருளாதாரத்தை நொருக்கி அதன் மக்களை மேலும் வறுமைக்குள் தள்ளும் முனைப்பில், ட்ரம்ப் நிர்வாகம் அதன் யுத்த வேட்டைநாய்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்தத் தடைகளின் தாக்கம் என்னவாய் இருந்தாலும், ஈரானை மண்டியிடச் செய்வதற்கும் உலகின் எஞ்சிய நாடுகளை தனது குற்றங்களில் உடந்தைகொள்ளச் செய்வதற்கும் வாஷிங்டன் அதன் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் பிரயோகிப்பதற்கு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறாக மத்திய கிழக்கில் இன்னுமொரு பேரழிவுகரமான போர் முன்னெப்போதினும் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கும் அதேநேரத்தில், ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பெருகும் விரோதமும் உலகளாவிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் ஒரு நாடு மற்ற அத்தனை நாடுகளுக்கும் எதிராய் நிற்கிறதான ஒரு பைத்தியகாரக்கூடமாக ஆகிக் கொண்டிருப்பதும் -சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலையீடு இல்லாதபட்சத்தில்- சென்ற நூற்றாண்டின் உலகப் போர்களையும் கூட சிறிதாக்கி விடக் கூடிய ஒரு உலகளாவிய தீப்பற்றலுக்கு மேடை அமைத்துக் கொண்டிருக்கிறது.