Print Version|Feedback
Amid ongoing conflicts, Pence extends olive branch to EU
நிகழ்ந்து வரும் மோதல்களுக்கு இடையே, பென்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமாதான கரம் நீட்டுகின்றார்
By Alex Lantier
22 February 2017
ஐரோப்பிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஐரோப்பாவிற்கான அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் விஜயத்தை, ட்ரம்ப் நிர்வாகத்துடனான உறவுகளைச் சீர்படுத்துவற்கான ஒரு வாய்ப்பாக காட்ட முனைந்தன. ட்ரம்ப் ரஷ்யாவை ஆதரிக்கும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் மைக்கல் ஃபிளினை பொறுப்பிலிருந்து நீக்கிய பின்னர், இவ்வாரயிறுதியில் முனீச் பாதுகாப்பு மாநாடு மற்றும் திங்களன்று புரூசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர் [பென்ஸ்] கூறிய கருத்துக்கள், ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போர் முனைவின் அடிப்படையில், ஐரோப்பாவுடனான நேட்டோ கூட்டணிக்கு வாஷிங்டனின் கடமைப்பாடுகளை வலியுறுத்தின.
முனீச் பாதுகாப்பு மாநாட்டில் பென்ஸ் அறிவிக்கையில், “ஐக்கிய அமெரிக்க அரசுகள் பலமாக நேட்டோவை ஆதரிக்கின்றன என்பதோடு, அட்லாண்டிக்கிற்கு இடையிலான இந்த கூட்டணிக்கு எங்களது கடமைப்பாட்டை அசைக்க முடியாதவாறு வழங்கும்,” என்றார். அமெரிக்க அரசாங்கம் "தொடர்ந்து ரஷ்யாவை கணக்கில்" கொண்டிருக்கும் என்றவர் தெரிவித்தார். அவர், “நமது பொதுவான பாதுகாப்பிற்கு ஒரு நியாயமான பங்கை" ஐரோப்பா வழங்க வேண்டுமென கோரியதோடு, மீள்ஆயுதமயப்படுத்தலை, குறிப்பாக ஜேர்மனியில், அதிகரிக்க வேண்டுமென்ற ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் அழைப்புகளையும் எதிரொலித்தார்.
"ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்ச்சியான கூட்டுறவு மற்றும் பங்காண்மைக்கு அமெரிக்காவின் பலமான பொறுப்புறுதியை" பென்ஸ் புரூசெல்ஸில் மீளவலியுறுத்தினார். “… நமக்கிடையே என்ன தான் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், நம் இரு கண்டங்களும் ஒரேமாதிரியான பாரம்பரியத்தை, ஒரே மாதிரியான மதிப்புகளை மற்றும் அனைத்திற்கும் மேலாக சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மூலமாக சமாதானம் மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் ஒரே நோக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றன" என்றார்.
இக்கருத்துக்களுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அதிகரித்த பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்படுகின்ற, அமெரிக்க வரலாற்றில் மிகவும் வலதுசாரி நிர்வாகத்தை ஆதரிக்க நகர்ந்தனர். ட்ரம்ப் நிர்வாகம் மிக பகிரங்கமாகவே அமெரிக்க புலம்பெயர்ந்தோரை பாரியளவில் சுற்றிவளைக்க மற்றும் அடிப்படை சமூக திட்டங்கள் மீது ஆழ்ந்த தாக்குதல்களை நடத்த தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ளளார் என்ற பென்ஸின் உத்தரவாதங்களை அவர்கள் நற்சான்றுகளாக பரபரப்போடு ஏற்றுக் கொண்டனர்.
“எதிர்காலத்திற்கும் உத்தரவாதமளிக்கும் வார்த்தைகளை, வாஷிங்டனின் புதிய அணுகுமுறை குறித்து பெருமளவில் விவரிக்கும் வார்த்தைகளை, நான் செவியுற்றேன்,” என்று ஐரோப்பிய ஒன்றிய ஜனாதிபதி டொனால்ட் டஸ்க், பென்ஸ் உடனான அவரது சந்திப்பிற்குப் பின்னர் புரூசெல்ஸில் அறிவித்தார். “கடந்த காலத்தை போலவே, ஓர் ஐக்கிய ஐரோப்பாவிற்கான கருத்திற்கு, அமெரிக்காவின் முழுமனதுடன் தங்குதடையற்ற —மீண்டும் கூறுகிறேன் தங்குதடையற்ற— ஆதரவை நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம்,” என்றார்.
எவ்வாறிருந்த போதினும் பென்ஸ் இன் கருத்துக்கள் முந்தைய நிலைப்பாடுகளில் இருந்து ஒரு விலகலாக இருந்தாலும் கூட, அவை ட்ரம்ப் குறித்த ஐரோப்பிய ஒன்றிய கவலைகளை முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை என்பதை டஸ்க் தெளிவுபடுத்தினார். ஐரோப்பாவில் அணுஆயுதங்களைப் பிரயோகிப்பது, நேட்டோவை "வழக்கற்று போனதாக" நிராகரித்தது, ஜேர்மனி நிறைய அமெரிக்க வாகனங்களை வாங்க வேண்டுமென கோரியது, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற்றத்தை வரவேற்றது என ட்ரம்பின் சில கருத்துக்கள், ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கான பிரிவுகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை டஸ்க் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.
“நமது உறவுகள் மற்றும் நமது பொதுவான பாதுகாப்பு பற்றி பல புதிய மற்றும் சிலவேளைகளில் ஆச்சரியமூட்டும் கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம் எமக்கு பாசாங்குத்தனமாக அனைத்தும் அதன் முந்தைய நிலையிலே இருக்கிறது என காட்டப்படுகின்றது,” என்றார்.
முனீச்சில் பென்ஸ் உரையாற்றுவதற்கு முன்னதாக டஸ்கின் கவலைகள் ஜேர்மன் அதிகாரிகளால் எதிரொலிக்கப்பட்டன. “ஐரோப்பா மற்றும் நேட்டோ நோக்கிய உங்களின் குரல் எங்கள் கண்டத்தின் நல்லிணக்கத்தின் மீது ஒரு நேரடி பாதிப்பைக் கொண்டிருக்கும் என்பது நமது அமெரிக்க நண்பர்களுக்கு நன்கு தெரியும்,” என்று முனீச் மாநாட்டில் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயென் தெரிவித்தார். பேர்லின் மற்றும் மாஸ்கோவிடம் இருந்து வாஷிங்டன் சமதூரத்தில் இருப்பதாக கூறிய ட்ரம்பின் அறிக்கையை அப்பெண்மணி பின்வருமாறு அறிவித்து மறைமுகமாக தாக்கினார்: “நமது மதிப்புகள், நமது எல்லைகள் மற்றும் சர்வதேச சட்டத்தைக் கேள்விக்குட்படுத்துபவர்களுக்கும் கூட்டாளிகளுக்கும் ஒரே சமதூர கொள்கை இருக்க முடியாது,” என்றார்.
பென்ஸ் விஜயத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளது எதிர்வினையானது, ட்ரம்பை எதிர்க்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எவ்விதத்திலும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தை சார்ந்திருக்க முடியாது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அண்மித்து ஒரு தசாப்தகாலமாக ஆழ்ந்த சிக்கனத் திட்டங்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்களை நடத்தியுள்ள, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரங்கள், அரசியலமைப்புக்கு விரோதமான முஸ்லீம் மீதான ட்ரம்பின் தடை மற்றும் பாரியளவில் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கான அவர் திட்டங்கள் போன்ற அவரின் ஜனநாயக விரோத கொள்கைகளுக்கு கோட்பாட்டுரீதியில் எந்த எதிர்ப்பும் கொண்டிருக்கவில்லை. சர்வதேச அளவில் அவற்றின் சொந்த ஏகாதிபத்திய நலன்களை தொடர்ந்து வலியுறுத்துவதற்காக, அவற்றை அனுமதிக்கும் விதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதே அவற்றின் அக்கறையாகும்.
நேட்டோவுக்கு எதிரான ட்ரம்ப் அறிக்கைகளால் வெளிப்படுத்தப்பட்டவாறு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு இடையே வரலாற்றுரீதியில் வேரூன்றிய பதட்டங்களில் எதுவுமே தீர்க்கப்படவில்லை. உண்மையில், அவற்றைக் குறித்து வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் பகிரங்கமாக விவாதிப்பதும் கூட இல்லை. கடந்த ஆண்டு ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் விமர்சித்த, தோல்வியடைந்த அட்லாண்டிக் இடையிலான சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை (TTIP) குறித்து பென்ஸ் பேசவேயில்லை என்று செய்திகள் குறிப்பிட்டன.
அதற்கு பதிலாக, உக்ரேனில் ரஷ்ய-ஆதரவு ஆட்சியைக் கவிழ்த்திய 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரிக்கவும் மற்றும் அவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைக் கலைந்து ஐரோப்பிய ஒன்றிய இராணுவ செலவினங்களில் பாரியளவிலான மக்கள் விரும்பாத உயர்வை நியாயப்படுத்தவும் பேர்லினை அதனுடன் அணிசேர்த்துக் கொண்ட பராக் ஒபாமாவின் கீழ் ரஷ்யாவிற்கு எதிராக தொடங்கப்பட்ட போர் உந்துதலை, வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் கண்மூடித்தனமாக பயன்படுத்தி வருகின்றன. இது, ட்ரம்பை ரஷ்யாவின் ஒரு கருவியாக வலதிலிருந்து தாக்குவதற்கு அமெரிக்காவில் பத்திரிகை பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள ஜனநாயக கட்சியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை அணிசேர்க்கிறது.
“ஐரோப்பிய அதிகாரிகளுக்கு இப்போதைக்கு நிர்வாகத்திடம் இருந்து அவர்களுக்கு என்ன தேவையோ அது கிடைத்துவிட்டது,” என்று பேர்லினில் உள்ள Carnegie Europe சிந்தனை குழாமின் Judy Dempsey ஐ மேற்கோளிட்டு புளூம்பேர்க் செய்திகள் நிறைவு செய்தது: “உக்ரேனின் கிழக்கில் வன்முறை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால், அதை நீங்கள் எவ்வாறு நிறுத்த போகிறீர்கள்? அவர்களை எவ்வாறு நீங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வரப் போகிறீர்கள்? திட்டநிரலை புட்டின் அமைக்க விட்டுகொடுக்க போகிறீர்களா? அவர்கள் அதை கேட்டுக் கொள்வார்கள் என்று அமெரிக்காவிற்கு மேர்க்கெல் கொடுத்த சேதி மிகத் தெளிவாக உள்ளது.
“அவர் தலைவர் நேட்டோவிற்கு பக்கபலமாக நிற்கிறார் என்றும், அமெரிக்கா அக்கூட்டணிக்கான அதன் கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்யுமென்றும் முனீச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெளிவுபடுத்தினார். பொதுவாக நிச்சயமற்றத்தன்மை நிலவுகின்ற ஒரு நேரத்தில், இதுவொரு நல்ல செய்தி தான்,” என்று ஜேர்மனியின் Frankfurter Allgemeine Zeitung எழுதியது. “அவர்கள் பாதுகாப்பு கொள்கையில் நிறைய செய்ய வேண்டியிருப்பது ஐரோப்பியர்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் யதார்த்தவாதிகளாவும் இருக்கிறார்கள்: அதாவது அமெரிக்கா இல்லாமல், நிஜமான பிரதான அச்சுறுத்தல்களை அவர்களால் கையாள முடியாது,” என்று குறிப்பிட்டது.
சர்வதேச உறவுகளுக்கான பிரெஞ்சு பயிலகம் எனும் சிந்தனைக்குழாமின் தலைவர் Thierry de Montbrial நியூ யோர்க் டைம்ஸிற்குத் தெரிவிக்கையில், “அட்லாண்டிக்கிற்கு இடையிலான கூட்டணியின் முக்கியத்துவம் மக்களுக்கு அவசியப்படுவதாக உபதேசிப்பதில்" பென்ஸ் வெற்றி பெற்றுள்ளார் என்றார். ஐரோப்பிய மீள்ஆயுதமயமாக்கலுக்கான பென்ஸின் ஆதரவையும் Montbrial பாராட்டினார்: “ஐரோப்பா பலமாக இருப்பதை அவர் விரும்புகிறார் என்பதில் [அ]வர் தெளிவாக உள்ளார், இது ஒரு விதத்தில் கடந்த காலத்திலிருந்து ஒரு நல்ல மாற்றமாகும், அப்போது வாஷிங்டன் ஒரு பலமான ஐரோப்பிய பாதுகாப்பு குறித்து ஐயுறவு கொண்டிருந்தது.”
பென்ஸ் பயணத்தின் மீதான இதுபோன்ற பாராட்டுக்களில் நிலைக்க முடியாதவாறு, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ட்ரம்ப் உறவுகளில் நிலவும் தற்போதைய தளர்வு இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது பெரிதும் தெளிவின்றி உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சமூக கோபம் தீவிரமடைந்து வருவதற்கு இடையே, அக்கண்டம் எங்கிலும் வாக்காளர்கள் மத்தியில் தீவிரவலது கட்சிகள் வளர்ந்து வருவதற்கு மத்தியில் மற்றும் பிரிட்டன் வெளியேற்றத்திற்கு இடையே, இதுபோன்றவொரு தளர்வு, ஐரோப்பாவிற்கு உள்ளேயே அபிவிருத்தி அடைந்து வரும் அரசியல் மோதல் மற்றும் ஸ்திரமின்மையை எதிர்கொள்ளும் என்பதும் பிரச்சினைகளில் குறைந்ததில்லை.
“ஐரோப்பிய ஒன்றியத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களை பென்ஸ் குறைத்துக் காட்டுகிறார்" என்பதை Le Monde ஒப்புக் கொள்கின்ற போதினும், அது எழுதியது: “அவர் நிர்வாகம் கவனமாக இருக்க விரும்புவதைப் போலவும், அல்லது சில மாதங்களில், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, ஒருவேளை இத்தாலியில் தேர்தல்கள் நடந்த பின்னர் பதவிக்கு வரவிருக்கின்ற புதிய தலைவர்களுடன் ஓர் ஆழ்ந்த விவாதத்திற்குக் காத்துக் கொண்டிருப்பதைப் போல, இன்னமும் அவர் கருத்துக்கள் பெரும்பாலும் மிகவும் பொதுப்படையாக இருந்தன,” என்றது.
வெள்ளை மாளிகை மறுக்கும் ஒரு விரிவான ராய்டர்ஸ் அறிக்கையின் தகவல்கள்படி, ட்ரம்பின் நவ-பாசிச தலைமை அரசியல் மூலோபாயவாதி ஸ்டீவ் பானன், ஐரோப்பிய ஒன்றியம் "பிளவுபட்டிருப்பதாக" மீண்டும் கூறுவதற்காக, பென்ஸ் விஜயத்திற்கு முன்னதாக ஜேர்மன் இராஜாங்க அதிகாரிகளோடு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். “இந்த விதமான ஒருங்கிணைந்த-ஐரோப்பிய ஒன்றியத்தில்" அவருக்கு நம்பிக்கை இல்லை என்றும், மேற்கு ஐரோப்பா "பலமான தேசியவாத இயக்கங்களின் மீது" நிறுவப்பட்டுள்ளது என்றும் வத்திக்கான் கூட்டத்தில் அவர் வழங்கிய 2014 கருத்துக்களுக்கு ஒத்த விதமான கருத்துக்களை அவர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவித்தன.
“போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் சமாதானம் மற்றும் செல்வசெழிப்பை உறுதிப்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் வகித்த பாத்திரத்திற்கு" ட்ரம்ப் "மதிப்பளிக்கவில்லை" என்பதில் பேர்லினின் கவலையை பானனின் கருத்துக்கள் உறுதிப்பபடுத்துவதாக ராய்டர்ஸ் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. “'ஐரோப்பிய ஒன்றியம் சிதறுவது மரணகதியிலான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதில் வெள்ளை மாளிகையில் எந்த புரிதலும் இல்லை என்பதாக தெரிகிறது,' என்று ஆதார நபர் [ஒருவர்] தெரிவித்தார்."
எவ்வாறிருப்பினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிளவுபட்டுள்ளன என்பதோடு, தீவிர அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய பதட்டங்கள் இன்னமும் நிலவுகின்றன. நேற்று பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் க்கு இடையே மார்ச் 6 இல் வேர்சைல்ஸில் நான்கு-நாடுகள் மாநாடு ஒன்றை அறிவித்தார். “நாங்கள் நான்கு நாடுகளும் மிக முக்கிய நாடுகளாவோம்,” என்று அப்பட்டமாக அறிவித்த ஹோலாண்ட், ஐரோப்பாவில் "ஏனையவர்களுடன், ஒருங்கிணைந்து நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை கூற வேண்டியது எங்களின் கடமையாகும்,” என்றார்.
Le Monde இன் செய்திப்படி, இது பேர்லினின் ஒரு கொள்கை மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது, அது பிரிட்டன் வெளியேறுவதென்று வாக்களித்த பின்னர், எஞ்சிய 27 ஐரோப்பிய நாடுகளின் ஐக்கியம் மற்றும் உத்தியோகபூர்வ சமநிலையைப் பேண வேண்டுமென வலியுறுத்தியது. ஆனால் ட்ரம்ப் தேர்வானதற்கு பின்னர், பேர்லின் ஆளும் வட்டாரங்கள் போக்கை மாற்றி உள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. “அங்கத்துவ நாடுகளை நம்மால் பிடிவாதமாக நமது இலக்குடன் கட்டிப்போட முடியாது என்று அவர்கள் முடிவெடுத்துள்ளார்கள், நாம் கருத்தொருமித்த உடன்பாட்டிற்காக காத்திராமல் முன்செல்ல வேண்டியிருக்கிறது,” என்றது குறிப்பிட்டது.