Print Version|Feedback
Further observations on social inequality and the politics of the pseudo-left
சமூக சமத்துவமின்மை மற்றும் போலி-இடதுகளின் அரசியல் குறித்த மேலதிக அவதானிப்புகள்
By Eric London and David North, 26 January 2017
26 January 2017
உலக சோசலிச வலைத் தளம் “அமெரிக்காவில் சொத்துப் பங்கீடும் போலி-இடதுகளின் அரசியலும்” என்ற தலைப்பிலான தனது ஜனவரி 18 அன்றான முன்னோக்கில், அடுத்த 9 சதவீதம் பேர் (உச்சத்தில் இருக்கும் 1 சதவீதம் பேருக்கு அடுத்து வருகின்ற சலுகைகொண்ட மற்றும் பெரும் ஊதியம் பெறக் கூடிய சுமார் 21 மில்லியன் அமெரிக்கர்கள்) உள்ளிட மக்களில் மேலே இருக்கும் 10 சதவீதம் பேரை கீழே இருக்கின்ற 90 சதவீதம் பேரில் இருந்து பிரிக்கின்ற இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற 2016 டிசம்பர் UC பேர்க்கெலி அறிக்கை ஒன்றை மேற்கோளிட்டிருந்தது.
பல வாசகர்கள் இதற்கு கருத்துரை இட்டிருந்தனர், அடுத்த 9 சதவீதம் பேரது நலன்களுக்கும் கீழிருக்கும் 90 சதவீதம் பேரது நலன்களுக்கும் இடையில் பேதம் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சிறுபான்மையினரது கருத்துரைகளும் இதில் இருந்தன. அடுத்த 9 சதவீத அடுக்கின் நலன்கள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராக இருந்ததாகக் கூறியதன் மூலம் உலக சோசலிச வலைத் தளம் அவர்களை சோசலிசத்தில் இருந்து துரத்திக் கொண்டிருந்ததாக, கருத்திட்ட சிலர் கவலை வெளியிட்டனர்.
George Gonzales என்ற ஒரு கருத்துரையாளர், “ஒட்டுமொத்தமாய் இந்த 9 சதவீதம் பேரும் 1 சதவீதத்துடன் செயலூக்கத்துடன் கைகோர்த்திருப்பதைப் போல” இக்கட்டுரை தொனிக்கிறது என்றார்; ben franklin [pre death] எழுதினார்: “’அடுத்த 9 சதவீதத்தில் வரக் கூடிய எல்லோரையுமே ஒன்றாக்குவதும் அவர்களை முதலாளித்துவ வர்க்கத்துடன் இணைத்து வைப்பதும் சரியானதல்ல என்பது மட்டுமல்ல, அது ஆபத்தானதுமாகும். இந்த வருவாய் வரம்புகளுக்குள் வரும் தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதன் மூலமாக, முதலாளித்துவ வர்க்கமும் அவர்களது அரசுப் பிரதிநிதிகளும் அன்றாடம் உந்திதள்ளுகின்ற பிளவுபடுத்தல்களில் நீங்களும் ஒன்றைச் சேர்க்கிறீர்கள்.”
சொத்து மற்றும் வருவாய் சமத்துவமின்மை மீதான தரவுகளை இந்தக் கட்டுரை பயன்படுத்தியிருந்த விதம் சமூகத்தின் சொத்துடைய பகுதிகளின் வர்க்கக் குணாம்சத்தைத் தீர்மானிப்பதில் ஒரு பிழையான அடிப்படையைக் கொண்டிருந்ததாக மற்ற கருத்துரையாளர்கள் திட்டவட்டம் செய்திருந்தனர். Human6 தனது திட்டவட்டத்தில் இந்தக் கட்டுரை ஒரு “வலுவில்லாத… அனுபவவாத, நடைமுறைவாத, குட்டி-முதலாளித்துவ தாராளவாத” வழிமுறையின் அடிப்படையிலானதாக இருந்தது, ஏனென்றால் “போலி-இடதையும் அது பிரதிநிதித்துவம் செய்கின்ற அடுக்குகளையும் கண்டறிய முயலுவதற்கு, டாலர் தொகைகளையும் சதவீதங்களையும்” அது பயன்படுத்தியது என்றார். “அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் ([வருவாய் அளவு] $247,520), மனோதத்துவ மருத்துவர்கள் ($193,000), பல்மருத்துவர்கள் ($177,130), மயக்கமருந்து செவிலியர்கள் ($160,250), விமானிகள், இணை-விமானிகள், மற்றும் விமானப் பொறியாளர்கள் ($136,400) …” ஆகியோர் உள்ளிட, கருத்துரையாளர் எழுதினார், “உழைப்பின் மூலமாக, வாங்கப்படுவதற்கும் விற்கப்படுவதற்குமான பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வதன் மூலமாக, தங்களது வருவாயை ஈட்டக் கூடிய” தொழிலாளர்கள் அடுத்த 9 சதவீதத்தில் அல்லது உச்சத்தில் இருக்கும் 5 சதவீதத்தில் கூட இருப்பதை உலக சோசலிச வலைத் தளம் கண்டுகொள்ளாமல் விட்டிருந்ததாக Human6 கூறியிருந்தார்.
கருத்துரை பிரிவில் பல-தரப்பான விவாதம் நடைபெறுவதை உலக சோசலிச வலைத் தளம் வரவேற்கிறது என்பதுடன் ஆதரவாகவும் விமர்சனரீதியாகவும் வரும் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கிறது. இந்தக் கருத்துரைகள், வர்க்க உறவுகள் குறித்தும் புரட்சிகர இயக்கத்தின் அரசியல் நோக்குநிலை குறித்துமான முக்கியமான பிரச்சினைகளை எழுப்புகின்றன. இந்த விவாதத்தில் எழுப்பப்பட்ட சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை திறனாய்வு செய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும்.
முதலாவதாய், பிக்கெட்டி, சாயெஸ் மற்றும் சுஹ்மன் அறிக்கையில் இருந்து கிடைக்கக் கூடிய வருவாய் குறித்த தரவுகள் மிகக் கவனமாய் ஆய்வு செய்வதற்கு உரியவை என்று நாங்கள் நம்புகிறோம். அடுத்த 9 சதவீதம் பேர் கீழிருக்கும் 90 சதவீதம் பேருடனும் உச்சத்தில் இருக்கும் 1 சதவீதம் பேருடனும் ஒப்பீட்டளவில் கொண்டிருக்கக் கூடிய இடநிலையின் மீது அது மிகமுக்கியமான வெளிச்சம் பாய்ச்சக் கூடியதாக இருக்கிறது.
இந்த அறிக்கையில் வரிக்கு முந்தைய சராசரி வருவாய் சதவீதவாரியாக பிரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. தனிநபர் வருவாய் மற்றும் வீட்டு வருவாயை ஒப்பீடு செய்து பயன்படுத்தியிருப்பது சமத்துவமின்மையின் ஆய்வில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது, ஏனென்றால் சமூக அடுக்குமயமாதலின் மட்டம், மற்றும் மக்கள்பெருக்கத்திற்கு வயதாகுதல், வீட்டுஅங்கத்தவர்களது எண்ணிக்கையளவில் வீழ்ச்சி மற்றும் தொழிலாளர் படைக்குள்ளாக பெண்களது நீண்ட-காலத்திற்கான நுழைவு போன்ற தனித்தனிப் பகுதிரீதியான மாற்றங்கள் தொடர்பான முக்கியமான மாறிகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்த ஒரு இன்னும் முழுமையான சித்திரத்திற்கு அது அனுமதிக்கிறது.
2014 இல், 90வது சதவீதத்தில் நுழைவதற்கு (அதாவது, 90வது சதவீதத்தின் மிகக் குறைந்த செல்வமுடைய உறுப்பினராவதற்கு) வரிக்கு முந்திய தனிநபர் வருவாய் $122,691 தேவைப்பட்டது, 95வது சதவீதத்தில் நுழைவதற்கு இந்த அளவு $184,329 ஆக இருந்தது. 98வது சதவீதத்தின் மிகக் குறைந்த சொத்துடைய அங்கத்தவர் $471,968க்கு கீழ் வருவாய் ஈட்டுபவராக இருப்பார்.
கீழ்வரிசை அடுக்குகளுக்குள் நுழைவதற்குரிய வருவாய் அளவு ஒரு மிகப்பெரும் சரிவைக் காட்டுகின்றன. 80வது சதவீதத்தில் நுழைவதற்கு $81,983 (90வது சதவீதத்திற்கான நுழைவுத் தகுதியளவில் 66.8 சதவீதம்) தேவைப்படுகிறது, 70வது சதவீதத்தில் நுழைவதற்கு $61,542 அவசியமாக உள்ளது (90வது சதவீதத்திற்கான நுழைவுத் தகுதியளவில் 50.2 சதவீதம்), 60வது சதவீதத்தில் நுழைவதற்கு $47,706 (38.9 சதவீதம்) மற்றும் 50வது சதவீதத்தில் நுழைவதற்கு $36,492 (29.7சதவீதம்) தேவையாக இருக்கிறது. அடுத்த 9 சதவீதத்தின் உச்சத்தில் இருப்பவர்களது (98வது சதவீதத்தில் மிக அதிக சொத்துடைய அங்கத்தவர்கள்) தனிநபர் வருமானங்கள் 80வது (~6 மடங்கு), 70வது (~8 மடங்கு), 60வது (~10 மடங்கு), மற்றும் 50வது சதவீதங்களில் (~13 மடங்கு) இருப்பவர்களைக் காட்டிலும் கணிசமாய் அதிகமிருக்கிறது.
மக்களின் வறுமைப்பட்ட கீழ்ப்பாதியிடம் அடிப்படையில் ஒன்றுமேயில்லை. மிக வறுமைப்பட்ட 117 மில்லியன் அமெரிக்கர்களிடையே சராசரி தனிநபர் வருவாய் சுமார் $16,200 ஆக இருக்கிறது. மக்களில் முழுமையாக ஐந்தில் ஒரு பங்கினர் —அதாவது சுமார் 45 மில்லியன் மக்கள், வரையறைப்படி அடுத்த 9 சதவீதத்தில் இருப்பவர்களைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்குக்கும் அதிகமான பேர்— வரிக்கு முந்திய தனிநபர் வருமானமாக ஆண்டுக்கு $12,000 க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.
இந்தப் புள்ளிவிவரங்களை அவகாசமெடுத்து ஆய்வு செய்தால் சமூகத் துருவப்படலின் அதிகரிப்பு மிகத் தெளிவாகத் தெரியும். 1980 முதல் 2010 வரையிலும், வருடாந்தர வருவாய் வளர்ச்சியானது 90வது சதவீத நுழைவுப்புள்ளியில் சராசரியாக 1.5 சதவீதமாகவும், 95வது சதவீத நுழைவுப் புள்ளியில் சராசரியாக 1.7 சதவீதமாகவும், 99வது சதவீத நுழைவுப் புள்ளியில் சராசரியாக 2.2 சதவீதமாகவும் இருந்தது. மிகவறுமைப்பட்ட கீழிருந்தான 30 சதவீதம் பேருக்கான வருவாய் சராசரியாக வீழ்ச்சி கண்டிருந்தது கீழிருந்து மூன்றாவது மற்றும் 70வது சதவீதத்துக்கு இடையிலானோரின் வருவாய் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே அதிகரித்திருந்தது. 90வது சதவீதத்திற்கான வருவாய் வளர்ச்சி 70வது சதவீதத்திற்கானதை விடவும் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேல் அதிகமாய் இருந்தது, 60வது சதவீதத்திற்கானதை விடவும் இரட்டிப்பான விகிதத்தில் இருந்தது, 50வது சதவீதத்திற்கானதை விடவும் மும்மடங்காய் இருந்தது, 40வது சதவீதத்திற்கானதை விடவும் ஏழு மடங்கு அதிகமாய் இருந்தது.
பிக்கெட்டி, சாயெஸ் மற்றும் சுஹ்மன் நடத்தியிருக்கும் ஆய்வானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் மீதான ஒரு விமர்சனத்திற்கும் அத்துடன் அதன் அரசியல் கட்டமைப்புகள் மீதான புரிதலுக்கும் இரண்டுக்குமே இன்றியமையாத முக்கியத்துவம் கொண்ட விடயங்களை வழங்குகிறது. ஆனால் அமெரிக்க சமூகம் குறித்த பகுப்பாய்வின் இந்த தரவுகள் மீது அழுத்தமளிப்பதை “அனுபவவாதம்” என்றும் “மார்க்சிச-விரோதம்” என்றும் Human6 கூறுகிறார். உண்மைத் தரவுகளை மிகப் பொறுமையாக திரட்டி பகுப்பாய்வு செய்ய அவசியமாக இருக்கும் அனுபவ ஆய்வுவிசாரணையை மெய்யியல் அனுபவவாதத்தின் மீதான மார்க்சிச விமர்சனத்துடன் போட்டு Human6 குழப்புகிறார். இந்த ஆய்வுமுறை ஒவ்வொரு விஞ்ஞானத்திற்கும் அத்தியாவசியமானது, அதில் மார்க்சிசமும் அடங்கும்.
ஜனவரி 18 முன்னோக்கில் மேற்கோள் காட்டப்பட்ட பிக்கெட்டி, சாயெஸ் மற்றும் சுஹ்மனது தரவுகள் சமூகத்தின் உச்சத்தில் இருக்கும் 1 சதவீதத்தினருக்கு இடையே, இன்னும் விரிந்த அளவில், மிக வசதி படைத்த 10 சதவீதம் பேருக்கு இடையே, செல்வமும் வருவாயும் மலைக்க வைக்கும் அளவில் குவிந்து செல்வதை வெளிக்கொணர்கின்றன. சொத்து எங்ஙனம் பகிரப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுவதன் மூலமாக, அமெரிக்காவில் அரசியல் வாழ்வின் கீழமைந்த பொருளாதார உறவுகளின் முக்கியமான அம்சங்களை உலக சோசலிச வலைத் தளம் சுட்டிக் காட்டுவதற்கு இந்தத் தரவுகள் அனுமதித்தன.
இந்த தரவுகள் காட்டுவது என்ன? சுருக்கமாய் கூறினால், கடந்த 40 ஆண்டுகளின் காலத்தில், கீழிருக்கும் 90 சதவீதம் பேரிடம் இருந்து மேலிருக்கும் 10 சதவீதம் பேருக்கு, சொத்தும் வருவாயும் பாரிய அளவில் மறுபகிர்வு செய்யப்படுவதை ஆளும் வர்க்கம் முன்னெடுத்திருந்தது; இந்த சமூகச் சூறையாடலானது வசதியானவர்கள் மற்றும் செல்வந்தர்களது வாழ்க்கைகளை உழைக்கும் மக்களின் வாழ்க்கைகளில் இருந்து பிரிக்கின்ற ஒரு முன்கண்டிராத பிளவு இடைவெளியை உருவாக்கியிருந்தது.
சில கருத்துரையாளர்கள் கூறியதைப் போல உலக சோசலிச வலைத் தளம் இந்த பிரிவுக் கோட்டை தன்னிஷ்டமாய் தேர்ந்தெடுக்கவில்லை. இத்தகைய சமூகவியல் வகைப்பிரிப்புகள் எல்லாம் துல்லியமற்றவை என்பதோடு இயல்பாகவே அவற்றுக்கென வரம்புகளையும் கொண்டவை என்ற அதேநேரத்தில், உச்சத்தில் இருக்கும் 10 சதவீதம் பேருக்கும் கீழிருக்கும் 90 சதவீதம் பேருக்கும் இடையிலான பிளவானது அந்த தரவில் இருந்து எழுந்தவையே ஆகும் — அதாவது சமூக சமத்துவமின்மையின் நடப்பு மட்டங்கள் மற்றும் வர்க்க உறவுகளின் உண்மையான நிலை ஆகியவற்றில் இருந்து எழுந்தவையாகும்.
வருவாய் மட்டம் மட்டுமே வர்க்கப் பகுப்பாய்வின் ஆதிஅந்தம் அனைத்துமாக இருப்பதில்லை என்பது உண்மையே, ஆனால் உழைப்பின் நிகழ்ச்சிப்போக்கின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்ற ஒட்டுமொத்த செல்வத்தில் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளும் பெறுகின்ற விகிதாச்சார அளவானது பின்விளைவுகளற்ற ஒரு பிரச்சினையாக அரிதாகவே இருக்க முடியும். “யாருக்கு என்ன கிடைக்கிறது?” என்ற கேள்வியை புறந்தள்ளுகின்ற அளவுக்கு சோசலிஸ்டுகள் தத்துவார்த்த அரூபங்களின் மூடுதிரைகளுக்குள் தொலைந்து போவது கிடையாது. இறுதி ஆய்வில், உழைக்கும் நிகழ்ச்சிப்போக்கில் உற்பத்தி சாதனங்களது உடைமையும் உபரி மதிப்பின் பிழிவும் நேரடியாக மற்றும் மறைமுகமாக, தேசிய வருவாயின் பகிர்வில் தான் வெளிப்பாட்டைக் காண்கின்றன.
கடந்த 40 ஆண்டு காலத்தில் வீழ்ச்சி கண்டிருக்கக் கூடிய கீழிருக்கும் 90 சதவீதத்தினரின் வருவாயை பலிகொடுத்துத்தான் உச்சத்தில் இருக்கும் 10 சதவீதத்தினரின் வருவாய் வளர்ச்சி கண்டிருக்கிறது. உச்சத்தில் இருக்கும் 10 சதவீதம் பேர் மேலும் மேலும் அதிகமாய் தமது வருவாயையும் சொத்துகளையும் நிதி ஊகத்தின் மூலமாகப் பெறுகின்ற வேளையில், கீழிருக்கும் 90 சதவீதத்தினரிடம் மிகக் குறைவாகவே பங்குகள் இருக்கின்றன. அடிமட்டத்திலிருக்கும் 50 சதவீதத்தினர் பொருளாதாரரீதியாக நாசப்படுத்தப்பட்டிருக்கின்றனர், அவர்களுக்கென்று சொந்தமாய் எதுவுமே கிடையாது. 50வது சதவீதம் முதல் 90வது சதவீதம் வரை இருப்போர், அடிமட்டத்தில் இருக்கும் 50 சதவீதத்தினரை விடவும் ஓரளவுக்குக் குறைவான வேகத்திலேயே என்றாலும், தமது வருவாய் தேக்கம் கண்டிருப்பதையும், வருவாய் மற்றும் சொத்துகளிலான தமது பங்கு வீழ்ச்சி காண்பதையும், உச்சத்தில் இருக்கும் 10 சதவீதம் பேருடன் ஒப்பிடுகையில் தமது வலுநிலை கணிசமாக சுருங்கி விட்டிருப்பதையும் காண்கின்றனர்.
அடுத்த 9 சதவீதத்தினர் 1940 க்குப் பிந்தைய காலத்தின் எந்த சமயத்தை விடவும் அதிகமாய் தேசியவருவாயில் ஒரு மிகப்பெரும் பங்கை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். அடிமட்ட 90 சதவீதம் பேரது சமூக நிலை பலிகொடுக்கப்பட்டுத்தான் இந்த அடுக்கின் சமூக நிலையானது கணிசமாக உயர்வு கண்டிருக்கிறது. அதேசமயத்தில், கீழிருக்கும் 90 சதவீதம் பேரை விடவும் அதிகமான செல்வத்தை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும், உச்சத்தில் இருக்கும் 1 சதவீதம் பேருடன் ஒப்பிடும்போது அடுத்த 9 சதவீதத்தினரின் வீட்டு செல்வத்தின் பங்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்கள் ஒரு உயிர்ப்புடனான சாராம்சத்தைக் கொண்டுள்ளன. தனிமனித, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையின் அத்தனை அம்சங்களிலும் இவை வெளிப்பாடு காண்கின்றன. அடுத்த 9 சதவீதத்திற்குள் இருக்கின்ற கணிசமான பேர் உண்மையான பொருளாதார அழுத்தங்களால் சூழப்பட்டிருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அந்த அழுத்தங்களின் தன்மையும் தீவிரமும் கீழிருக்கும் 90 சதவீதம் பேரால், அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால், கீழிருக்கும் 70 சதவீத அல்லது 50 சதவீத பேரால் அனுபவிக்கப்படுகின்ற அழுத்தங்களில் இருந்து பண்புரீதியாக மாறுபட்டவையாகும்.
கீழிருக்கும் 90 சதவீதம் பேரின் கணிசமான பேரது அன்றாட வாழ்க்கைகள் - வேறுபட்ட அளவான அவசியத்துடன்- மருத்துவப் பராமரிப்பு, சுகாதாரமான உணவு, உறைவிடம், சுத்தமான குடிநீர், கல்வி, வேலைக்கு செல்வதற்கும் திரும்புவதற்குமான போக்குவரத்து வசதி, சிறு குழந்தைகள் மற்றும் வயதுமுதிர்ந்தவர்களுக்கான பராமரிப்பு மற்றும் பிற அடிப்படையான வாழ்வாதார அவசியங்களது அணுகலுக்கான ஒரு மாறாத போராட்டத்தினாலேயே ஆக்கிரமிக்கப்படுபவையாக இருக்கின்றன. மக்களின் இந்தப் பிரிவின் பெரும்பகுதியை பொறுத்தவரை, தோல்வியானது மரணத்தில், நிராதரவில், போதைமருந்து மற்றும் மது மயக்கத்தில், சிறையில், அவர்களின் குழந்தைகள் அரசு குழந்தைகள் காப்பக சேவைகளால் எடுக்கப்படுகின்ற நிலையில் அல்லது வீடின்மையில் விளையக் கூடும்.
அடுத்த 9 சதவீதத்தினரோ முற்றிலும் மாறுபட்ட சமூகக் கவலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள் அன்றாட உயிர்பிழைப்பு சம்பந்தப்பட்டவையல்ல என்ற அதேவேளையில், அழுத்தங்கள் இந்த அடுக்கிற்கு இருக்கின்றன என்பதை சோசலிஸ்டுகள் மறுக்கவுமில்லை, அவை முக்கியமற்றவை என்று நாங்கள் கூறவுமில்லை.
$122,000 ஐ வரிக்கு முந்திய தனிநபர் வருவாயாகக் கொண்டிருப்போர் (90வது சதவீத நுழைவுப்புள்ளி) கடுமையான உளவியல் அழுத்தங்களுக்கும் தனிமனித மகிழ்ச்சியின்மைக்கும் மூலவளமாக இருக்கக் கூடிய உண்மையான பொருளியல் அழுத்தங்களின் கீழ் தான் வாழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளின் வசதியான பகுதிகளில் வாழ்கிறார்கள், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து தனித்து வசிக்கிறார்கள், வேறு பல்பொருள் அங்காடிகளில் பொருள் வாங்குகிறார்கள், வேறு உணவகங்களில் சாப்பிடுகிறார்கள், தங்களது பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். அவ்விடத்தில் தான், ஓரளவுக்கு அதிகமான அல்லது குறைவான மட்டத்திற்கு, திடீரென்று அதிர்ச்சிகரமான தலைகீழ் மாற்றம் வந்தால் அது தங்களை தொழிலாள வர்க்கத்திற்குள் தூக்கிவீசி விடும் என்ற அச்சம், அவர்களது சமூக நனவில் குடிகொள்கிறது.
உண்மையில், குறிப்பாக உச்சத்தில் இருக்கும் 5 சதவீதத்தினரது நிதிப் பாதுகாப்புநிலையுடன் ஒப்பிடும்போது தமது சொந்த நிதிப் பாதுகாப்பு நிலையின் வரம்புகள் குறித்து அவர்கள் உணர்ந்திருப்பதானது பொறாமை மற்றும் அதிருப்தியின் ஒரு உணர்வை தூண்டி விடுகிறது. உயர் நடுத்தர வர்க்கத்தின் உறுப்பினர்களுக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு தேவையான பணம் குறித்த கவலை வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம், ஆயினும் வாழ்க்கைபாணி விடயத்தில், $125,000 சம்பளத்திற்கும் ஆண்டிற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமாய் வருவாய் வருவதற்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் மிக நன்றாகவே புரிந்து கொள்கின்றனர்.
உச்சத்தில் இருக்கும் 10 சதவீதத்தினருக்குள்ளாக செல்வம் “நியாயமற்ற” வகையில் பங்கீடு செய்யப்பட்டிருப்பது —அதாவது, மிகச் செல்வம் குவித்திருக்கும் 1 முதல் 0.1 சதவீதம் வரையான பேர்களுக்குள்ளாக அது அதீதமாய் குவிந்திருப்பது— குறித்த கூட்டான சமூக அதிருப்தியானது நிறம், இனம் மற்றும் பால் அடையாளத்தை மையமாகக் கொண்ட குட்டி-முதலாளித்துவ அரசியலின் மிகவும் உரத்த குரல் வடிவத்தில் வெளிப்பாடு காண்கிறது. அதன் இலக்கு முதலாளித்துவ வர்க்கத்தை பறிமுதல் செய்து பரந்த மக்களின் அடிப்படையிலான சமூக சமத்துவத்தை எட்டுவதல்ல. மாறாக, 1) அதிர்ஷ்டசாலி தனிமனிதர்களுக்கு உச்ச 10 சதவீதத்திற்குள் நுழைவதற்கு வாய்ப்பு வழங்குகின்ற மற்றும் 2) இந்த அடுக்கிற்குள்ளாக இன்னும் சற்று நியாயமான வகையில் செல்வம் பகிர்வு செய்யப்படுவதை அனுமதிக்கின்ற சிறப்புச்சலுகைகளது ஒரு அமைப்புமுறையை ஸ்தாபிப்பதற்காகவே அது பாடுபடுகிறது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்பட்டப் படிப்புகளிலான அனுமதிக் கொள்கைகள், பேராசிரியர்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் நீக்குவது, வழக்கறிஞர் பதவிகள், அரசாங்க நீதிபதிகளது நியமனங்கள் மற்றும் பிற அரசாங்க மற்றும் தொழில்முறை பதவிகள் மேலும் மேலும் அதிகமாய் அடையாள அரசியலால் வழிநடத்தப்படுவதாக இருக்கின்றன. இந்த வழியில், வருவாய், அரசியல் அதிகாரம் மற்றும் தொழில்முறை அந்தஸ்து ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தீனி போட்டு வசதிமிக்க அடுத்த 9 சதவீதத்தினரின் சமூக உளவியலிலும் அரசியலிலும் அடையாள அரசியல் வகிக்கும் பாத்திரத்தை மேலும் முடுக்கிவிடுகிறது.
இந்த வருவாய் அடுக்கு ஒருபடித்தான தன்மை கொண்டதல்ல என்பது உண்மையே. அடுத்த 9 சதவீதத்தினரில் —இன்னும் உச்சத்தில் இருக்கும் 1 சதவீதத்தினரிலும் கூட—தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஆதரிப்பவர்கள் இருப்பார்கள். தொழிலாள வர்க்கத்திடம் தீர்க்கமான தலைமை இருக்குமானால் கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் மிகச் சிறந்த கூறுகள் அதனை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.
ஆயினும் சமூகக் கண்ணோட்டம் மற்றும் அரசியல் நோக்குநிலையின் அபிவிருத்தியில் சொத்து விநியோக நிலை மற்றும் வருவாய் ஒரு மிகவும் முக்கியமான காரணியாக இருக்கிறது என்பதை மறுப்பது அமெரிக்க சமூகத்தின் குணாம்சமாய் இருக்கும் சமத்துவமின்மையின் பாரிய மட்டங்களது அடிப்படை முக்கியத்துவத்தை மூடிமறைப்பதற்கே சேவைசெய்கிறது. மேலும், தொழிலாள வர்க்க பரந்த மக்களின் நலன்களை நடுத்தர வர்க்கத்தின் மிகவும் வசதியான பிரிவுகளின் நலன்களுக்கு கீழ்ப்படியச் செய்வதை நியாயப்படுத்துவதற்கும் இது சேவைசெய்கிறது.
சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்க அடுக்குமயமாதல் மீதான ஒரு பகுப்பாய்வு, எப்போதும் மார்க்சிஸ்டுகளுக்கு பகுப்பாய்வுக்கான ஒரு அடிப்படை அலகாக இருந்து வந்திருக்கிறது.
இந்த ஆய்வு விளாடிமிர் லெனினின் ஏகாதிபத்தியம் என்ற படைப்பிலும், அத்துடன் இரண்டாம் அகிலத்தின் பொறிவு தொடர்பான அவரது அத்தனை எழுத்துக்களிலும் மையமான மூலபாகமாக இருந்தது. ஏகாதிபத்தியத்தின் அபிவிருத்தியும் பெரும் முதலாளித்துவ சக்திகள் அதீத இலாபங்களை ஈட்டுவதும் சமூகத்தின் கட்டமைவில் நீண்டகால பின்விளைவுகளைக் கொண்டிருந்தது என்பதை புள்ளிவிபரங்கள் மற்றும் உண்மைகளின் ஒரு விரிவான பயன்பாட்டின் மூலமாக அவர் நிறுவிக் காட்டினார்.
கொள்ளை இலாபங்களின் திரட்சியானது, “தொழிலாளர் தலைவர்களையும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உயர் அடுக்குகளையும் விலைபேசுவதை சாத்தியமாக்கியது… தொழிலாளர்களாய் இருந்து முதலாளி வர்க்கத்திற்கு மாறிய, தங்களது வாழ்க்கைமுறையிலும், வருவாய் அளவிலும் மற்றும் தங்களது ஒட்டுமொத்த வெளித்தோற்றத்திலும் நன்கு பிலிஸ்தீனியர்களாகி விட்டிருந்த இந்த அடுக்குத்தான் இரண்டாம் அகிலத்தின் பிரதான முட்டுத்தூணாக இருக்கிறது, அத்துடன் நமது காலத்தில், முதலாளித்துவத்தின் பிரதான சமூக (இராணுவ முட்டுத்தூணல்ல) முட்டுத்தூணாக இருக்கிறது” என்று அவர் எழுதினார்.
லெனின், தொழிற்சங்க அதிகாரத்துவத்தை மட்டும் நோக்கி தனது கவனத்தை செலுத்தவில்லை, தங்களது “வருவாய் அளவிலும்” ஒட்டுமொத்த கண்ணோட்டத்திலும் இரண்டாம் அகிலத்தின் பிரதான சமூக அடித்தளமாக, முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான முட்டுத்தூணாக உருவாகியிருந்த தொழிலாளர்களின் ஒரு அடுக்கை நோக்கியும் செலுத்தினார். இந்த அடுக்குகள் தொழிலாளர்களாய் இருந்த அடுக்குகள்தான், தங்களது உழைப்பு சக்தியை ஊதியங்களுக்காக விற்கத் தள்ளப்பட்ட அடுக்குத்தான், ஆயினும் தொழிலாள வர்க்கத்தின் எஞ்சியவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் ஒரு மாறுபட்ட சமூக இடத்தை ஆக்கிரமித்திருந்தனர், இந்த சமூக இடத்திற்கு அவர்களின் வருவாய் மட்டமும் ஓரளவு காரணமாகின்றது.
இரண்டாம் அகிலத்தின் பொறிவு மற்றும் காட்டிக்கொடுப்புக்கான பதிலிறுப்பில் மூன்றாம் அகிலத்தை ஸ்தாபிப்பதில் இந்த பகுப்பாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது, லெனின் முன்வைத்தவாறாய்:
“இந்த நிகழ்வுப்போக்கின் பொருளாதார வேர்கள் புரிந்துகொள்ளப்பட்டு, அதன் அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவம் அங்கீகரிக்கப்படுவது நடவாமல் போனால் கம்யூனிச இயக்கத்தின் மற்றும் நிகழவிருக்கும் சோசலிசப் புரட்சியின் நடைமுறைப் பிரச்சினைகளது தீர்வை நோக்கி ஒரேயொரு அடியும் கூட எடுத்துவைக்க முடியாது.” [லெனின் படைப்புகளது சேகரம், தொகுதி 22 பக். 193-194]
இந்தப் போராட்டத்திற்கான திசையை அமைவு செய்வதில், லெனின் முன்வைத்த இன்னொரு தீர்மானகரமான புள்ளி அதன் பொருத்தத்தில் எதனையும் தொலைத்திருக்கவில்லை. ஒழுங்கமைந்த பரந்த மக்களுக்கு நெருக்கமாக இருப்பது அவசியம் என்ற அடிப்படையில் தொழிலாளர் அதிகாரத்துவத்தையும் பிரபுத்துவத்தையும் நோக்கி நோக்குநிலை அமைத்துக் கொண்டிருந்தவரான, ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் தத்துவாசிரிய தலைவரான கார்ல் கவுட்ஸ்கிக்கு எதிராய், லெனின், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏங்கெல்ஸ் “பழைய தொழிற்சங்கங்களின் முதலாளித்துவ தொழிற் கட்சி” என்று அவர் அழைத்த ஒன்றுக்கும் —இது சலுகையுடைய சிறுபான்மையாய் இருந்தது— “அடிமட்ட பரந்த மக்கள்” என்ற உண்மையான பெரும்பான்மைக்கும் இடையில் ஒரு பிரிப்புக் கோட்டை வரைந்து காட்டியிருந்தார் என்பதை சுட்டிக் காட்டினார்.
லெனின் இவ்வாறு கூறி நிறைவு செய்தார்: “ஆகவே, நாம் சோசலிஸ்டுகளாய் இருக்க விரும்பினால், இன்னும் கீழே ஆழமாய் உண்மையான பரந்த மக்களிடம் செல்வது நமது கடமையாகும்; இதுவே சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முழுமையான அர்த்தமும் நோக்கமும் ஆகும்.” [படைப்புகள் சேகரம், தொகுதி 23, பக்.119-120]
சமத்துவமின்மை மற்றும் வருவாய் அடுக்கு பிரச்சினை சோவியத் ஒன்றியம் குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்விலும் ஒரு மையமான அக்கறை எடுக்கப்பட்டதாய் இருந்தது. சோவியத் ஒன்றியத்தில் நிலவிய சமத்துவமின்மை, மற்றும் ஒரு மிருகத்தனமான சர்வாதிபத்திய சர்வாதிகாரம் எழுந்ததுடன் அதற்கிருந்த தொடர்பு ஆகியவை குறித்த பகுப்பாய்விற்காக காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற நூலில் ஒரு கணிசமான பகுதி அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. ட்ரொட்ஸ்கி சோவியத் அதிகாரத்துவத்தை, சோவியத் ஒன்றியத்தில் இருந்த “சமத்துவமின்மைகளை நெறிப்படுத்துகின்ற” நோக்கம் கொண்ட “சட்டஒழுங்கு காவலதிகாரி”யாக வரையறை செய்தார். சோவியத் தொழிலாள வர்க்கத்திற்குள் இருந்த வருவாய் மற்றும் சமூக பேதங்களை மிகக் கவனத்துடன் ஆய்வுசெய்த அவர், இன்றியமையாத உண்மைத் தரவுகளை ஒடுக்குவதற்கு ஸ்ராலினிச ஆட்சி முனைந்ததை குறிப்பிட்டுக் காட்டினார். வருவாய்க்கு முக்கியத்துவமளித்தல் என்பது, உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கின் முதன்மை தன்மை மீதான மார்க்சிச வலியுறுத்தலில் இருந்து விலகுதல் என்று கூறி ஸ்ராலினிசத்திற்கு வக்காலத்து வாங்கியவர்களுக்கு பதிலளிக்கையில், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:
செல்வத்தை பங்கிடுவது என்பது அதனை உற்பத்திக்கு செய்வதனுடன் பார்க்கையில் இரண்டாம் பட்சமான ஒரு காரணிதான் என மூடத்தனமான “தத்துவாசிரியர்கள்” தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும் தான். ஆயினும், இடைப் பரிவர்த்தனையின் இயங்கியலானது, அதன் அத்தனை சக்தியையும் இந்த இடத்தில் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கிறது. அரசினால்-கைவசமாக்கப்பட்ட உற்பத்தி சாதனங்களின் தலைவிதியானது நீண்டகாலப் போக்கில் தனிமனித இருப்பிலான இந்த பேதங்கள் ஒரு திசையிலோ அல்லது இன்னொரு திசையிலோ பரிணமிப்பதற்கு தக்கவாறே தீர்மானிக்கப்படுவதாக இருக்கும். ஒரு கப்பல் கூட்டு உடைமையாக அறிவிக்கப்படுகிறது, ஆனால் பயணிகள் தொடர்ந்தும் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது வகுப்பாய் பிரிக்கப்படுகிறார்கள் என்றால், மூன்றாம்-வகுப்பு பயணிகளை பொறுத்தவரை, வாழ்க்கைநிலைமைகளிலான பேதங்கள் உடைமைத்துவம் தொடர்பான சட்டபூர்வ மாற்றத்தைக் காட்டிலும் கணக்கிட முடியாத அளவுக்கு கூடுதல் முக்கியமானதாய் இருக்கும் என்பது தெளிவு. மறுபக்கத்தில், முதல்-வகுப்பு பயணிகளோ, தங்களது கைகளில் காப்பியும் சிகரெட்டும் தவழ, கூட்டு உடைமைத்துவம் என்னும் சிந்தனை தான் அனைத்துமே என்றும் ஒரு வசதியான அறை என்பது ஒன்றுமே கிடையாது என்றும் முத்துதிர்ப்பார்கள். இதில் இருந்து வளர்ச்சி காண்கின்ற குரோதங்கள் ஸ்திரமில்லாத கூட்டுடைமையை வெடிப்புடன் தகர்க்கவும் கூட செய்யக்கூடும். [காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி (நியூயோர்க்: லேபர் பப்ளிகேஷன்ஸ், 1991) பக். 203]
ட்ரொட்ஸ்கியின் இந்த புத்திசாலித்தனமான உள்ளடக்கத்தை, “99 சதவீதத்தினரின் கட்சி” ஒன்றுக்கான குட்டி-முதலாளித்துவ போலி-இடதுகளின் அழைப்பின் அடிப்படை முக்கியத்துவத்தை விளக்குவதற்கு, நாம் எடுத்துக் கொள்வோம். அமெரிக்கா என்ற பயணிகள் கப்பலில், ஒரு சதவீத பயணிகள் கடலில் நீண்டுவிரிந்த விஸ்தீரணமான நவீன அறைகளை எடுத்துக் கொள்கின்றனர். காப்டன் ட்ரம்ப்புடன் பிரத்யேகமாக ஐந்து-நட்சத்திர உணவகத்தில் உணவருந்தும் அவர்கள், அங்கே தங்களது சதைப்பிடிப்பான உணவை ஒரு பாட்டில் 10,000 டாலர் விலையான மதுபானத்துடன் உள்ளிறக்குகிறார்கள். இன்னொரு ஒன்பது சதவீதப் பயணிகள், அவர்களுக்கு கட்டுபடியாவதற்குத் தக்கபடி, விலைக்குறைவுக்கேற்றபடி தரம்குறைவதைக் கொண்ட அறைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். உச்ச பத்து சதவீதத்தில் மிக மலிவான அறைகள் கடலுக்குள் பார்க்கும் வசதியற்றவையாகவும், அழுக்கான விரிப்புகள் மற்றும் அசவுகரியமான போர்வைகளைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. அத்துடன், கணிசமான துணைக்கட்டணங்கள் செலுத்த முடியவில்லை என்றாலோ அல்லது செலுத்த விருப்பமில்லை என்றாலோ, இந்த அறையில் இருப்பவர்கள் வசதிபடைத்த பயணிகளுக்காய் ஒதுக்கப்படுகின்ற நீச்சல்குளம் மற்றும் உடலை வளப்படுத்திக்கொள்ளும் வசதிகளை பயன்படுத்துவதற்கும் கூட அனுமதிக்கப்படுவதில்லை.
பணம்படைத்த பத்து சதவீத பயணிகளில் கீழிருக்கும் ஒன்பது சதவீதத்தில் இருக்கும் பயணிகள் அறைகள் மற்றும் சலுகைகள் ஒதுக்கீட்டில் அதிருப்தி கொள்கிறார்கள். அரசியல் தந்திரமிக்கவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், சிறந்த அறைகளின் ஒரு பகுதி பயணிகளது நிறம், இனம், பால் மற்றும் பால் விருப்பத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பதன் மூலமாக இந்த அநீதிகளுக்கு தாங்கள் தீர்வுகாணவிருப்பதாக கூறுகிறார்கள். விருப்பத்திற்கேற்ப அறைகள் மறுபங்கீடு செய்யப்படுவதை சாதிப்பதற்கு ஓரளவுக்கு வெகுஜன ஆதரவு அவசியமாக இருக்கிறது என்பது தெரிந்ததே. ஆகவே அவர்கள், மேலோட்டமான ஜனநாயக வார்த்தைஜாலங்களைப் பிரயோகம் செய்து, இருக்கை பயணங்களை மேற்கொள்கின்ற கீழ்மட்ட 90 சதவீத பயணிகளின் ஆதரவைப் பெறும் வேலையில் இறங்குகின்றனர்! இந்த வழியில் தான், அமெரிக்க உல்லாச பயணக் கப்பலில் (SS அமெரிக்கா!) 99 சதவீதத்தினரின் கட்சி ஒழுங்கமைக்கப்படுகிறது! துரதிர்ஷ்டவசமாய், அறை ஒதுக்கீட்டில் புரட்சிக்குப் பின்னரும் கூட, கீழ்மட்ட 90 சதவீத பயணிகள் அதே இருக்கை பயணத்தையே தொடருகிறார்கள்.
சோசலிச இயக்கம் எதிர்கொள்கின்ற மையமான மூலோபாயப் பிரச்சினை அதன் வர்க்க நோக்குநிலை குறித்ததாகும். பதிலளிக்க வேண்டிய கேள்வி என்னவென்றால்: முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீசி ஒரு சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதற்கான அடிப்படையை உருவாக்குகின்ற சமூக சக்தி எது? சோசலிச இயக்கம் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனங்களில் தனக்கு அடித்தளம் அமைக்க வேண்டுமா, அல்லது மக்களில் வசதிபடைத்த பத்து சதவீதம் பேரிடையே இருக்கின்ற அதிருப்தியுடைய கூறுகளை நோக்கி அவற்றுக்குத் தக்கவாறு தனது வேலைத்திட்டத்தை தகவமைத்துக் கொள்ள வேண்டுமா?
அமெரிக்க மக்களின் கீழிருக்கும் 90 சதவீதம் என்பது கிட்டத்தட்ட 300 மில்லியன் மக்களைக் கொண்டதாகும். இது நிச்சயமாக ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு முக்கியமான அடித்தளம் ஆகும். புரட்சிகர மார்க்சிச இயக்கமானது, இந்த பரந்த சமூக அடுக்கில் இருந்துதான் —அது தவிர்க்கவியலாமல் ”அடுத்த 9 சதவீதம்” பேரில் இருக்கும் மிகவும் சமூக-நனவுள்ள மற்றும் மனிதாபிமான கூறுகளிடையே ஆதரவை ஈர்க்கும்— அமெரிக்க ஆளும் வர்க்கத்துடனும் அதன் தலைமையின் கீழிருக்கும் முதலாளித்துவ-ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் உலகளாவிய அமைப்புமுறையுடனும் கணக்குத் தீர்க்கவல்ல சக்தியை கட்டியெழுப்பியாக வேண்டும்.