Print Version|Feedback
Burma’s Rohingya crisis and human rights imperialism
பர்மாவின் ரோஹிங்யா நெருக்கடியும் மனித உரிமைகள் ஏகாதிபத்தியமும்
Peter Symonds
28 November 2017
இந்த வாரத்தில் பர்மாவுக்கு (மியான்மர்) போப் பிரான்சிஸ் விஜயம் செய்தமையானது அண்டைநாடுகளுக்கு கூட்டம்கூட்டமாக ஓடத் தள்ளப்பட்டிருக்கும் நாட்டின் ரோஹிங்யா முஸ்லீம் சிறுபான்மை மக்கள் முகம் கொடுக்கும் துயரத்தின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆகஸ்டு மாதத்தில் ARSA (அராகன் ரோஹிங்யா விடுதலை இராணுவம்) நடத்திய சிறிய தாக்குதல்களைத் தொடர்ந்து பர்மாவின் இராணுவத்தாலும் அதனுடன் தொடர்புடைய குண்டர்கள் கூட்டத்தாலும் குறைந்தபட்சம் 620,000 ஆண், பெண், குழந்தைகள் பர்மாவை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். இந்த அகதிகள் பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் அழுக்கடைந்த, மிதமிஞ்சிய எண்ணிக்கையில் அடைக்கப்பட்ட முகாம்களில் வசிக்கிறார்கள், இந்த இரண்டு நாடுகளுமே அவர்களுக்கு வரவேற்பில்லை என்பதைத் தெளிவாக்கியிருக்கின்றன.
இந்தப் பாரிய மனிதாபிமான நெருக்கடிக்கு கிடைத்திருக்கும் சர்வதேச பதிலிறுப்பு, எல்லாவற்றைக் காட்டிலும், “மனித உரிமைகளை” ஆட்சி மாற்றம் மற்றும் போர்கள் உட்பட தமது புவிஅரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக சுரண்டிக் கொள்கின்ற பெரும் ஏகாதிபத்திய சக்திகள் -அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அவற்றின் கூட்டாளிகள்- அளித்திருக்கும் பதிலிறுப்பு, கபடவேடம் மற்றும் சிடுமூஞ்சித்தனம் நிரம்பியதாக இருக்கிறது.
1988 இல் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மீது கொடூரமான ஒடுக்குமுறை அவிழ்த்து விடப்பட்டதை அடுத்து, பல தசாப்தங்களாய், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பர்மாவின் இராணுவ ஆட்சியை தீண்டத்தகாத ஒன்றைப் போலவே நடத்தி வந்திருக்கின்றன, ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதை கண்டனம் செய்தும் கடுமையான சர்வதேசத் தடைகளை திணித்தும் வந்திருக்கின்றன.
எதிர்க்கட்சி ஜனநாயகத்திற்கான தேசியக் கழகத்தின் (NLD) தலைவரான ஆங் சான் சூ கி, ஜனநாயகத்தின் ஒரு உதாரணமங்கையாக உலகெங்கும் விளம்பரப்படுத்தப்பட்டார், 1991 இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் கொடுக்கப்பட்டது. 1988 ஆர்ப்பாட்டங்களைத் தடம்புரளச் செய்து இராணுவத்தை தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கச் செய்ததில் அவருக்கு பங்கிருந்த போதிலும் கூட இராணுவ ஆட்சிக்குழுவால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமையானது, ஸ்தாபக ஊடகங்கள் அவர் மீது தியாகி அந்தஸ்தை பொழிவதற்கு அனுமதித்தது.
இராணுவத்தின் மீதான கண்டனங்களிலோ அல்லது சூ கிக்கான புகழாரங்களிலோ ஜனநாயக உரிமைகளுக்கான அல்லது பர்மா மக்கள் படும் துயரத்திற்கான எந்த உண்மையான கவலையும் இருக்கவில்லை. பர்மா இராணுவம் சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தது என்பது தான் அமெரிக்காவின் முதன்மையான குறைகூறலாக இருந்தது. பர்மாவின் உயரடுக்கில் மேற்கை நோக்கி நோக்குநிலை கொண்ட மற்றும் நாட்டை அந்நிய முதலீட்டாளர்களுக்கு திறந்து விடுவதற்கு ஆதரவான கன்னையை சூ கி பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இராணுவ ஆட்சி, சீனாவில் இருந்து தன்னை தள்ளி நிறுத்திக் கொள்வதற்கும் சூ கி மற்றும் அவரது NLDக்கு ஒரு அரசியல் பாத்திரத்தை உருவாக்கித் தருவதற்குமான விருப்பத்தை சமிக்கையளித்ததும் எல்லாமே மாறி விட்டன. கிட்டத்தட்ட ஒரேநாள் இரவில், பர்மாவுக்கான அடைமொழி, “அடாவடி அரசு” என்பதில் இருந்து “வளரும் ஜனநாயகம்” ஆக மாற்றப்பட்டது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் நாட்டினை தேனீக் கூட்டம் போல மொய்த்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2012 இல் விஜயம் செய்தார், அதன்பின் தடைகள் படிப்படியாக கைவிடப்பட்டன.
2016 தேர்தலில் NLD வெற்றி பெற்று அரசாங்கத்தின் நடைமுறை அரசாங்கத் தலைவராக சூ கி அமர்த்தப்பட்டதும், அது ஜனநாயகத்தின் மலர்ச்சியாகக் கூறி பாராட்டப்பட்டது. இராணுவம்தான் தொடர்ந்தும் முக்கியமான பாதுகாப்பு அமைச்சரவைகளின் பொறுப்பில் தொடர்ந்தது, மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத நாடாளுமன்ற ஆசனங்களது ஒரு தொகுப்பின் மூலமாக, அது உருக்கொடுத்திருந்த அரசியல்சட்டத்திலான எந்த மாற்றத்தின் மீதுமான வீட்டோ அதிகாரத்தை அது தக்கவைத்துக் கொண்டது என்ற உண்மை மீது அதிக வெளிச்சம் கொடுக்கப்படவில்லை.
இந்த மோசடியானது இப்போது பர்மாவின் மேற்கு மாநிலமான ராக்கைன் இல் ரோஹிங்யாக்களுக்கு எதிரான இராணுவ அட்டூழியங்களின் மூலம் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பெரும்பான்மையாக புத்த மதத்தினரைக் கொண்ட பர்மாவில் முஸ்லீம் ரோஹிங்யாக்கள் மீதான தூற்றல் என்பது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி இந்தியாவில் -1937 வரையில் பர்மா இதில் இடம்பெற்றிருந்தது- வளர்த்தெடுத்த பிரித்தாளும் கொள்கைகளில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது. 1948 இல் சுதந்திர பர்மாவாக ஆன நாட்டில் பல தலைமுறைகளாக அவர்கள் வாழ்ந்து வந்திருந்த போதிலும், மற்ற இன சிறுபான்மையினரைப் போலல்லாமல், பர்மாவின் உயரடுக்கினர் ரோஹிங்யாக்களை, “சட்டவிரோதமாக குடிபுகுந்தவர்கள்” அல்லது பிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்ட “வங்காளிகள்” என்றே கருதினர்.
1962 இல் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவ ஆட்சிக்குழு, உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதற்கும் அதிகாரத்திலான பிடியை ஒட்டவைப்பதற்கும் முஸ்லீம்-விரோத மற்றும் ரோஹிங்யா-விரோத பேரினவாதத்தை கிளறிவிட்டது. 1982 இல், நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை இனங்களின் பட்டியலில் சேர்க்காததன் மூலம் ரோஹிங்யாக்களுக்கு குடியுரிமைகளை அது இல்லாமல் செய்தது. சூ கியும் NLDயும் இதற்குக் கொஞ்சமும் சளைக்காத விதத்தில் இத்தகைய அந்நியர்வெறுப்பால் நிரம்பியவர்கள் என்பதோடு ரோஹிங்யாக்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்கும் எதிராய் உள்ளனர்.
சூ கியும் அவரது அரசாங்கமும், இராணுவத்திற்கு வழிவகையளிப்பவர்களாகவும் அதன் பாதுகாவலர்களாகவும் இருக்கும் நிலையில், இராணுவமானது எந்த மட்டத்திற்கு ரோஹிங்யா முஸ்லீம்களது ஒழிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது என்றால், ஒரு தசாப்தத்திற்கு முன்னராக இருந்தால் சர்வதேச அளவிலான கண்டன கூக்குரல்களையும் இராணுவத் தலையீடு இல்லையேல் கடுமையான தடைகளுக்கான கோரிக்கைகளையும் இது உருவாக்கியிருந்திருக்கும்.
இராணுவ அட்டூழியங்களுக்கு எதிராக சர்வதேச கோபம் பெருகுவதற்கான பதிலிறுப்பில், அமெரிக்கா UN அதிகாரிகளது குறிப்பை அடியொற்றி, இராணுவத்தின் நடவடிக்கைகளை “இனச் சுத்திகரிப்பு” என விமர்சனம் செய்திருக்கிறது. இந்த மாத ஆரம்பத்தில் பர்மாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுச் செயலரான றெக்ஸ் ரில்லர்சன், “மியான்மரின் பாதுகாப்புப் படைகளும் சட்டமுறைசாரா குழுக்களும் பரவலாய் அட்டூழியங்கள் இழைத்திருப்பதாக வரும் நம்பகமான தகவல்களால் ஆழமான கவலை” கொண்டிருப்பதாக அறிவித்தார்.
அமெரிக்கா பர்மா மீது தடைகளை மீண்டும் கொண்டுவருமா என்று கேட்டபோது, “இது இந்த நேரத்தில் ஆலோசனையளிக்கத்தக்கதாக இருக்காது என்றே” தான் கருதுவதாக அவர் அறிவித்தார். “மியான்மர் வெற்றிபெறுவதைக் காண நாங்கள் விரும்புகிறோம். வெறுமனே தடைகளை விதித்து விட்டு நெருக்கடி முடிந்து விட்டதாக நீங்கள் கூற முடியாது.” இராணுவ நடவடிக்கைகளை பாதுகாத்ததில் சூ கி யின் பாத்திரம் குறித்த எந்த விமர்சனத்தையும் டில்லர்சனும் ட்ரம்ப் நிர்வாகமும் கவனத்துடன் தவிர்த்து வந்திருக்கின்றனர்.
சூ கி யின் அந்தஸ்தை ஒரு “ஜனநாயக உதாரணமங்கை”யாக ஊதிப்பெருக்குவதற்கு உதவிய பல்வேறு தனிமனிதர்கள், ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மிக எச்சரிக்கையுடன் அவரை விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர், அவருக்குக் கொடுக்கப்பட்ட நோபல் பரிசு திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கூட கூறத் தொடங்கியுள்ளனர். போப் பிரான்சிஸ் இராணுவத்தின் மீதோ அல்லது சூ கி யின் மீதோ ஏதேனும் விமர்சனம் செய்வாரா, அல்லது “ரோஹிங்யா” என்ற வார்த்தையையேனும் பயன்படுத்துவாரா என்பதெல்லாம் ஊடக யூகங்களுக்கான பொருளாக ஆகியிருக்கிறது. விமர்சனத்தின் ஒரு முணுமுணுப்பையும் கூட அளிக்காமல் நேற்று அவர் பர்மாவின் இராணுவத் தலைவரான மூத்த தளபதி மின் அங் ஹிலாங்கை சந்தித்தார்.
பர்மா மீண்டும் சீனாவுக்கு நெருங்கிச் செல்வதாக அமெரிக்கா கருதுமானால், இவை அனைத்தும் துரிதகதியில் மாறிவிடும், பர்மா மறுபடியும் “அடாவடி அரசு” அந்தஸ்துக்குத் திரும்பக் கூடும். முப்படைத் தளபதியான ஜெனரல் ஹலாங் இப்போது தான் சீனாவுக்கான ஆறுநாள் பயணத்தை முடித்து வந்திருந்தார், அப்பயணத்தில் அவர் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்தார். சூ கி உலக அரசியல் கட்சிகளின் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் “இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஒரு உத்தியோகபூர்வ விஜயம்” செய்வதற்காகவும் பெய்ஜிங் செல்லவிருக்கிறார்.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரை, பெரும் சக்திகளின் அவலட்சணமான சூழ்ச்சிகளும் பர்மாவின் ரோஹிங்யா சிறுபான்மையினரின் துயரங்களுக்கு அவை காட்டும் அலட்சியமும் புவியரசியலில் இன்னுமொரு பாடமாகும். “மனித உரிமைகள்” பதாகைக்குப் பின்னால் எப்போதும் ஏகாதிபத்திய சக்திகளின் வேட்டையாடும் நலன்கள் ஒளிந்திருக்கின்றன, உலகெங்குமான உழைக்கும் மக்களுக்கு பெரும்பாலும் பயங்கரமான பின்விளைவுகளைக் கொண்டுவருகின்ற போதிலும் அவற்றை சிறிதும் தாட்சண்யமின்றி இந்த சக்திகள் முன்னெடுக்கின்றன.