Print Version|Feedback
French presidential candidate François Fillon calls for alliance with Germany against US
பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஃபிய்யோன் அமெரிக்காவிற்கு எதிராக ஜேர்மனியுடனான கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறார்
By Alice Laurençon
25 January 2017
பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களில் வலதுசாரி குடியரசு கட்சி (LR) வேட்பாளர் பிரான்சுவா ஃபிய்யோன் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலைச் சந்திக்க திங்களன்று பேர்லின் பயணித்தார். ஜேர்மன் நிதியமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
ஐரோப்பாவை நோக்கி, குறிப்பாக ஜேர்மனியை நோக்கி, ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்த ஆக்ரோஷமான நிலைப்பாடானது, ஐரோப்பிய சக்திகளிடையே ட்ரம்பின் "முதலிடத்தில் அமெரிக்கா" கொள்கைகள் அவற்றின் பொருளாதார மற்றும் இராணுவ நிலைப்பாட்டிற்கு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பீதியை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பாவின் பலமான பொருளாதார சக்தியான ஜேர்மனி உடன் பிரான்சின் பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை பலப்படுத்தும் நோக்கில், பேர்லினுக்கான ஃபிய்யோனின் விஜயம், ஐரோப்பிய சக்திகள் வாஷிங்டன் உடனான மோதலை நோக்கி துரிதமாக நகர்ந்து வருகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த ஜூனில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு இங்கிலாந்து வாக்களித்த பின்னர் மேர்க்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டும் விவரித்த புவிசார் மூலோபாய நோக்குநிலையை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது, அப்போது பாரிஸூம் பேர்லினும் நேட்டோ மற்றும் இங்கிலாந்திற்கு வெளியே ஓர் ஐரோப்பிய இராணுவ கூட்டணியை உருவாக்க முன்மொழிந்தன. ஃபிய்யோன் உடனான மேர்க்கெலின் விவாதத்தில் பெரும்பகுதி, “ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டணிக்கான" அவர் அழைப்பின் மீது மையமிட்டிருந்தது. இது, ட்ரம்ப் எதை சமீபத்தில் "வழக்கற்று போனதாக" அறிவித்தாரோ, அதாவது நோட்டோவிலிருந்து சுதந்திரமாக பிரான்சும் ஜேர்மனியும் அவற்றின் ஏகாதிபத்திய நலன்களை வலியுறுத்த அவற்றிற்கு இடையிலான அதிகரித்த இராணுவ கூட்டுறவுக்கான ஒரு முன்மொழிவாகும்.
இக்கொள்கையின் நோக்கம், அவசியமானால் இராணுவ பலத்தைக் கொண்டாவது, அமெரிக்க அரசாங்கத்தின் விரோத நகர்வை பலமாக எதிர்கொள்வதற்கு தயாரிப்பு செய்வதற்காகும் என்பதை ஃபிய்யோனின் கருத்துக்கள் தெளிவுபடுத்தின.
பேர்லின் சந்திப்பிற்கு முதல்நாள் Frankfurter Allgemeine Zeitung மற்றும் பிரெஞ்சு பத்திரிகையான Le Monde இணைந்து நடத்திய ஒரு நீண்ட நேர்காணலில், ஃபிய்யோன் ட்ரம்பை ஐரோப்பாவிற்கான ஒரு அச்சுறுத்தலாக விவரித்தார்: “ஐரோப்பா எச்சரிக்கைபடுத்த பட்டுள்ளது. நமக்கு ஆதாயமளிக்காத ஒரு அமெரிக்க கொள்கையை முகங்கொடுப்பதால், அது தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது இன்னும் அதிகமான ஐரோப்பிய முயற்சிகள் என்பது இதன் அர்த்தமாகும். ட்ரம்ப் என்ன அறிவித்திருக்கிறாரோ அது ட்ரம்புக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது,” என்றார்.
ஜேர்மனியின் Deutsche Bank மற்றும் பிரான்சின் BNP Paribas ஆகியவற்றின் மீது அமெரிக்க நிதி ஆணையங்கள் பல பில்லியன் யூரோ அபராதங்கள் விதித்ததை ஃபிய்யோன் சுட்டிக்காட்டினார்.
சிரியா மற்றும் உக்ரேனில் அமெரிக்கா தூண்டிய போர்களுக்கு ஒரு தீர்வுகாணும் அடிப்படையில், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான நெருக்கமான உறவுகளுக்கும் ஃபிய்யோன் அழைப்புவிடுத்தார். 2011 இல் தொடங்கிய சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிரான ஆட்சி மாற்றத்திற்கான ஒரு இரத்தந்தோய்ந்த பினாமி போருக்கு வாஷிங்டனும் ஐரோப்பிய அதிகாரங்களுமே தலைமை கொடுத்தன, மேலும் 2014 இல் கியேவ் இல் ஒரு பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பில் அவை ரஷ்ய-விரோத உக்ரேனிய ஆட்சியை நிறுவின. பிரான்ஸ் உட்பட நேட்டோ சக்திகளது ஏமாற்றுத்தனத்தின் அடிப்படையில், அவர் இந்த தலையீடுகளை பிழையானதாக பார்ப்பதாக ஃபிய்யோன் தெளிவுபடுத்தினார்.
அவர் தெரிவித்தார், ரஷ்யா "ஒரு மிகப்பெரிய நாடு, அதை ஒருவர் மேலோட்டமாக கையாளக் கூடாது, அது அணுஆயுதங்களைக் கொண்டுள்ள ஆனால் ஒரு ஜனநாயக பாரம்பரியமில்லாத ஒரு நாடாகும். … அறிவுபூர்வமாக யார்தான் ரஷ்யாவுடன் மோதலுக்குள் இறங்க விரும்புவார்கள்?” புட்டின் ஒரு நம்பகமான பங்காளியா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்: “மேற்கை எப்போதுமே நம்ப முடியுமா? லிபியா, கொசோவோ [போர்களில்], ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார பங்காண்மையில் அது ரஷ்யர்களை ஒருபோதும் தவறாக வழிநடத்தவில்லையா? ரஷ்யா நிறைய பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றாலும், அதுமட்டுமே பதிலளிக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரே நாடல்ல,” என்றார்.
ஜேர்மனி உடனான பிரான்சின் கூட்டணியை "அடிப்படையானது" என்று குறிப்பிட்டும், ஹோலாண்ட் அவரது பதவியின் ஆரம்ப ஆண்டுகளில் ஜேர்மனியை ஆரம்பத்தில் "சுற்றி வளைக்க" முயற்சித்ததற்காக அவரைக் கண்டித்தும், ஃபிய்யோன் பிரான்கோ-ஜேர்மன் கூட்டணியை "மீண்டும் பலப்படுத்துவதற்கு" அழைப்புவிடுத்தார். எவ்வாறிருப்பினும் பிரான்சின் "பொருளாதார பலவீனம் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இல்லாதிருப்பதற்கு" இடையிலும், இக்கூட்டணியை அவர் "சமதரப்பினருக்கு இடையிலான பங்காண்மை" என்றும் வலியுறுத்தினார்.
பாரீஸ் மற்றும் பேர்லின் தலைமையில் ஐரோப்பிய மண்டலத்தில் ஒரு பொருளாதார அரசாங்கத்திற்கான முன்மொழிவுகளை ஃபிய்யோன் கோடிட்டு காட்டினார். “வணிகங்கள் மீது… ஓர் ஒருமித்த வரி திட்டத்தை" அமைப்பதன் மூலம், “அனைத்தினும் முதலாவதாக ஐரோப்பிய மண்டலத்திற்கு புத்துயிரூட்ட நான் முன்மொழிகிறேன்,” என்று ஃபிய்யோன் குறிப்பிட்டார். உலக பொருளாதாரத்தில் டாலர் மேலாதிக்கத்தைக் குறைக்கவும் மற்றும் ஐரோப்பிய நாணய நிதியத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு சாத்தியமான எதிர்பலமாக உருவாக்கி, "யூரோவை ஒரு சர்வதேச கையிருப்பு நாணயமாக ஆக்கவும்" ஃபிய்யோன் முன்மொழிந்தார்.
இதுபோன்றவொரு இராணுவ மற்றும் நிதியியல் கூட்டுறவை அபிவிருத்தி செய்வதில் பேர்லின் மற்றும் பாரீஸின் நோக்கங்கள் பிற்போக்குத்தனமானவையாகும். ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உடைவுக்கான முன்நிற்கும் அபாயம் ஆகியவற்றிற்கு விடையிறுப்பாக, ஐரோப்பிய ஆளும் வர்க்கம் இராணுவவாத மற்றும் பொலிஸ்-அரசு கொள்கைகளைச் சேர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தை காப்பாற்றி வைக்க முயற்சித்து வருகிறது.
நேட்டோ அதிகாரங்களுக்கு இடையே ஒரேயடியாக இராணுவ மோதல் அபாயத்தைத் தீவிரப்படுத்தும் இத்தகைய மூலோபாயங்கள், தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பேரழிவுகரமான தாக்குதல்களைக் குறித்து யோசிக்க வைக்கின்றன. பிரான்சில் "கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான" ஃபிய்யோனின் அழைப்பானது, 500,000 அரசுத்துறை வேலைகளை வெட்டுவதற்கும் மற்றும் பிரான்சில் அரசு நிதிபெறும் மருத்துவக் காப்பீட்டின் சமூக பாதுகாப்பு முறைகளில் பெரும்பான்மையை அல்லது அனைத்தையும் நீக்குவதற்கும் சூளுரைத்துள்ள அவர் பிரச்சாரத்துடன் பிணைந்துள்ளது.
புலம்பெயர்வை குறித்து ஃபிய்யோன் குறிப்பிடுகையில், அவர் தத்துவார்த்தரீதியில் செங்கென் மண்டலத்தின் திறந்த எல்லைகளைப் புறக்கணிப்பதாகவும் தெரிவித்ததுடன், ஐரோப்பாவின் உள் மற்றும் வெளி எல்லைகள் மீது பாதுகாப்பை அதிகரிக்க அழைப்புவிடுத்தார். “பிரான்ஸ் அகதிகள் ஒதுக்கீட்டு அளவை ஏற்க வேண்டுமென்பதில்லை. அது ஒவ்வொரு நாட்டுக்குமே ஒரு கவலையாக உள்ளது,” என்று கூறிய ஃபிய்யோன், மேர்க்கெலின் அகதிகள் கொள்கையை விமர்சித்ததுடன், அவர் தலைமையின் கீழ் பிரான்ஸ் ஜேர்மனியில் இருந்து "ஒரு வேறுபட்ட தேர்வை மேற்கொள்ளும்" என்று குறிப்பிட்டார்.
பல ஐரோப்பிய சக்திகள் அமெரிக்க தலைமையிலான சட்டவிரோத 2003 ஈராக் படையெடுப்பை விமர்சித்தபோது ஏற்பட்ட, பாரீஸ்-பேர்லின்-மாஸ்கோ அச்சை பலமாக நினைவூட்டுகின்ற, பேர்லின் உடனான ஃபிய்யோனின் முன்மொழியப்பட்ட கூட்டணி, கடந்த நூற்றாண்டில் இரண்டு முறை உலக போராக வெடித்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நீண்ட மற்றும் ஆழ்ந்த எதிர்விரோதங்களைச் சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய உறவுகளின் ஒப்பீட்டளவிலான ஸ்திரப்பாடானது, அமெரிக்காவின் பரந்த பொருளாதார மேலாதிக்கத்தின் மீதும் மற்றும் சோவியத் ஒன்றியமானது நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு பொதுவான எதிரியாக இருந்தது என்ற உண்மையின் மீதும் தங்கியிருந்தது. ஆகவே 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான உறவுகளை மாற்றியது. போர் கொள்கை மற்றும் எண்ணெய், ஆதார வளங்கள், சந்தைகள் மற்றும் மலிவு உழைப்பைப் பெறுதல் ஆகியவற்றின் மீது ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே மோதல்கள் துரிதமாக மீண்டும் எழுந்தன.
அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி அதிகரிக்கின்ற நிலையிலும், ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் வெளியுறவு கொள்கையின் பிரதான இலக்குகளில் ஒன்றாக கொண்டுள்ள சீனா, ரஷ்யா உடன் ஐரோப்பிய சக்திகள் முன்பினும் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்கின்ற நிலையிலும், உலகளாவிய புவிசார் மூலோபாய பதட்டங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது இன்னும் கூர்மையடைந்து உள்ளன.
பொருளாதார விவகாரங்களுக்கான ஜேர்மன் மந்திரி, சிங்மார் காப்ரியேல், குறிப்பிடுகையில், ஐரோப்பா மற்றும் ஜேர்மனி "பயந்தோ அல்லது அடிபணிந்த விதத்திலோ" ட்ரம்புக்கு விடையிறுக்கக் கூடாது, மாறாக "உறுதியாக" அவற்றின் சொந்த நலன்களைப் பின்தொடர வேண்டுமென கூறினார். ஜேர்மனி "ஒரு பலமான நாடு" மற்றும் ஐரோப்பா "ஒரு பலமான கண்டம், இவை ஒன்றுசேர்ந்து இருக்க வேண்டும்.” ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவிற்கு சீனா மற்றும் ஆசியாவை நோக்கிய ஒரு புதிய நோக்குநிலை அவசியப்படுகிறது என்பது காப்ரியேல் கருத்தாக உள்ளது. அமெரிக்கா, "சீனாவுடன் மற்றும் ஆசியா எங்கிலும் ஒரு வர்த்தக போரைத் தொடங்குகிறது என்றால், பின் நாம் ஒரு சரியாக பங்காளிகளே" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
அமெரிக்காவிற்கு எதிராக ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனாவின் முதலாளித்துவ ஆட்சிகளது ஒரு கூட்டணி உருவானால் —இந்தவொரு அச்சுறுத்தல் இவ்வாறு உருவாவதைத் தடுப்பதற்காக வாஷிங்டனை அதிகரித்தளவில் இராணுவ நடவடிக்கைக்கு தூண்டும் என்ற நிலையில்— அது முற்றிலும் பிற்போக்குத்தனமாக நிரூபணமாகும். என்ன வெளிப்படுகிறது என்றால், உலகளாவிய பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த தன்மைக்கும் எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகளைக் கடந்துவர சர்வதேச முதலாளித்துவ வர்க்கம் தகைமையற்றுள்ளது என்பதையே இது மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
இதற்கான மூல காரணமாக உள்ள முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தின் மூலமாக, ஒரு புதிய உலக போர் வெடிப்பைத் தடுக்கக்கூடிய ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும்.
உண்மையில் முதலாளித்துவ ஐரோப்பாவை கிழித்து தொங்கவிட்டு வரும் மிகக் கடுமையான மற்றும் கட்டுப்படுத்தவியலாத பிளவுகள், ஃபிய்யோன் விஜயத்தின் போதே, அவர் பேர்லின் உடனான நெருக்கமான உறவுகளை நோக்கி பாரீஸை இட்டுச் செல்வதற்கு முயன்ற போதினும் கூட, தெளிவாக காட்சிக்கு முன் வந்தன.
ஜேர்மனியின் வாகனத்துறை மீது தடையாணைகள் விதிக்கப்படும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை "ஜேர்மனியின் ஒரு வாகனம்" என்று முத்திரை குத்தியமை உட்பட, ஜேர்மனியை நோக்கிய ட்ரம்பின் குரோதம், ஜேர்மனியின் ஆளும் வர்க்கத்தால் ஓர் அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதுடன், பாரீஸுடன் ஒருங்கிணைவது உட்பட இன்னும் சுதந்திரமான மற்றும் ஆக்ரோஷமான ஒரு ஐரோப்பிய வெளியுறவு கொள்கையை அவசியப்படுத்துகிறது.
எவ்வாறிருந்தபோதினும், மேர்க்கெல் மற்றும் ஃபிய்யோனுக்கு இடையே குறிப்பிடத்தக்க மோதல்களும் இருந்தன, வெறுமனே புலம்பெயர்வு பிரச்சினை மீது மட்டுமல்ல, மாறாக ஓர் ஒருங்கிணைந்த ஐரோப்பிய பொருளாதார அரசாங்கத்திற்கான ஃபிய்யோனின் முன்மொழிவு மீதும் தான், இதை ஏற்கனவே பேர்லின் நிராகரித்துவிட்டது அப்போது இது அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியால் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், ஃபிய்யோன் நெருக்கமான இராணுவ உறவுகளை ஸ்தாபிப்பதன் மூலமாக ரஷ்யாவுடனான உறவுகளை "மறுகட்டமைப்பு" செய்யவும் மற்றும் உக்ரேன் நெருக்கடியின்போது விதிக்கப்பட்ட பொருளதார தடையாணைகளை நீக்குவதையும் நோக்கம் கொண்டுள்ளார் —இதை மேர்க்கெல் எதிர்க்கிறார்.
ஐரோப்பாவில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பதட்டங்கள் ஏற்கனவே அதீத கூர்மையாக உள்ளன, ஃபிய்யோன் ஐரோப்பாவின் மேலாதிக்க சக்தியாக பிரான்ஸ் மாற வேண்டுமென்ற அவர் விருப்பத்தை அறிவித்துள்ளார் —இது ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கத்திற்கு ஒரு முழுவதுமான சவாலாகும். இவ்விரு நாடுகளிலும், வலதுசாரி, தேசியவாத சக்திகள் வளர்ந்து வருகின்றன, மேலும் பிரிட்டன் வெளியேறுவதற்கான கடந்த ஆண்டின் வாக்கெடுப்பு ஐரோப்பாவில் பதட்டங்களை மட்டுமே தீவிரப்படுத்தி உள்ளது. இலண்டன் ஐயத்திற்கு இடமின்றி, ஐரோப்பிய கண்டத்தில் இன்னும் அதிக இராணுவ ஒருங்கிணைப்புக்கான அழைப்புகளை ஓர் அச்சுறுத்தலாக, குறிப்பாக பிரிட்டன் வெளியேறியதற்கு பின்னர், இதனால் இங்கிலாந்து பிரதம மந்திரி தெரேசா மே ட்ரம்புக்கு இன்னும் நெருக்கமாக நகர்ந்து வருகிறார்.