Print Version|Feedback
Pentagon budget: A blueprint for World War III
பெண்டகன் வரவு-செலவு திட்டம்: மூன்றாம் உலக போருக்கான ஒரு முன்நகல்
Bill Van Auken
4 February 2016
பெண்டகனின் 2017 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவு திட்டக்கணக்கை முன்மொழிந்த பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்டரின் செவ்வாய்கிழமை உரை, உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிகப்பெரிய அணுஆயுத சக்திகளான ரஷ்யா மற்றும் சீனாவுடனான இராணுவ மோதல்களுக்கு வாஷிங்டனின் முன்கூட்டிய தயாரிப்புகளை எடுத்துரைத்தது.
வாஷிங்டன் டி.சி. இன் பொருளாதார மன்றத்தில் போயிங் மற்றும் நோர்த்ரோப் க்ரும்மன் (Northrop Grumman) போன்ற பிரதான ஆயுத உற்பத்தி நிறுவனங்களும், அத்துடன் பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் கோல்ட்மன் சாச்ஸ் போன்ற நிதியியல் பெருநிறுவனங்களும் உள்ளடங்கலாக இந்த ஊக்குவிப்பாளர்களை கொண்ட ஓர் நன்றிகாட்டும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புத்துறை செயலரின் உரை, அணுகுண்டுவீச்சு மனிதப்படுகொலை வரையும் மற்றும் அதையும் உள்ளடக்கி, என்ன வழிவகை அவசியப்பட்டாலும் அதைக் கொண்டு உலக சந்தைகள் மற்றும் ஆதாரவளங்கள் மீது வாஷிங்டன் அதன் மேலாதிக்கத்தை பெறுவதற்கான அதன் நோக்கங்களை சிறிதும் தயக்கமின்றி அறிவிக்கும் ஓர் அறிக்கையாக இருந்தது.
அமெரிக்காவின் இராணுவ மற்றும் தொழில்துறை கூட்டின் ஒரு நீண்டகால வல்லுனரான கார்ட்டரால் முன்வைக்கப்பட்ட அந்த அறிக்கை, அமெரிக்கா மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடி ஒரு மூன்றாம் உலக போருக்கான ஒரு உண்மையான மற்றும் அதிகரித்த அபாயத்தை முன்வைக்கின்றது என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளம் எடுத்துரைத்த எச்சரிக்கைகளுக்கு ஒரு பலமான நிரூபணத்தை வழங்குகிறது.
ஐரோப்பாவில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவ கட்டமைப்பிற்கான நிதிகளை நான்கு மடங்காக்கியமை பெண்டகன் வரவு-செலவு திட்டக்கணக்கில் முன்மொழியப்பட்ட மிகப்பெரிய உயர்வாகும். இது உத்தேசமாக 800 மில்லியன் டாலரில் இருந்து 3.4 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டு இருந்தது. ஐரோப்பிய கண்டத்தின் காவல் அரனாக ஏற்கனவே வாஷிங்டன் நிறுத்தியிருக்கும் 65,000 துருப்புகளுக்கு கூடுதலாக, ரஷ்யாவின் நுழைவாயிலாக உள்ள முன்னாள் பால்டிக் குடியரசுகளுக்குள் அத்துடன் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் முழுமையாக ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு படைப்பிரிவுகளை "ஒன்றிலிருந்து ஒன்றுக்கு" மாற்றும் சுழற்சிக்காக இந்த நிதி அதிகரிப்புகளிலிருந்து பணம் வழங்கப்படும்.
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து, ரஷ்யாவின் எல்லைகளில் பெரும் எண்ணிக்கையிலான நேட்டோ துருப்புகள் நிலைநிறுத்தப்படாது என்ற மாஸ்கோ உடன் எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் ஓர் அப்பட்டமான மற்றும் ஆத்திரமூட்டும் மீறலை அந்த முன்மொழிவு பிரதிநிதித்துவம் செய்கிறது.
இதற்கும் கூடுதலாக, கூடுதல் அமெரிக்க எதிர்ப்புப் படைப்பிரிவுகளின் வேகமான தலையீட்டை அனுமதிக்கும் வகையில், டாங்கிகள், பீரங்கி குண்டுகள், தரைப்படைக்கான போர் வாகனங்கள் மற்றும் ஏனைய ஆயுதங்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான இராணுவ தளவாடங்கள் எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியா தொடங்கி போலந்து, பல்கேரியா மற்றும் ருமேனியா வரையில் ரஷ்யாவிற்கு மிக அருகே தாக்கும் தொலைவில் நெருக்கமாக சேமித்து வைக்கப்பட உள்ளன.
ரஷ்யாவை சுற்றி வளைக்க நிதியை 400 சதவீதம் அதிகரிப்பதானது, "ஐரோப்பாவில் நமது வலுவான இராணுவ தோரணையை பலப்படுத்தவும் மற்றும் நேட்டோ அங்கத்துவ நாடுகளுக்கான நமது 5 ஆம் ஷரத்து கடமைப்பாடுகளை பாதுகாப்பதற்குரிய நமது ஆற்றலை மேம்படுத்துவதற்கும் அமெரிக்காவிற்கு உதவும்" என்று அறிவித்து ஜனாதிபதி பராக் ஒபாமா செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். எந்தவொரு அங்கத்துவ நாட்டுக்கு எதிரான தாக்குதலிலும் அந்நாட்டை இராணுவரீதியில் பாதுகாக்க நேட்டோவிற்கு அவசியப்படும் இந்த 5 ஆம் ஷரத்தை எடுத்துக்காட்ட முயல்வதன் மூலமாக, ஒபாமா, பால்டிக் குடியரசுகளை பாதுகாக்க அமெரிக்கா "தரைப்படை துருப்புகளை" இறக்கும் என்று 2014 இல் அவர் சூளுரைத்ததை மீண்டும் வலியுறுத்தி இருந்தார், அவ்விதத்தில் அந்த வலதுசாரி மற்றும் தீவிர ரஷ்ய-விரோத ஆட்சிகளை முன்கணிப்பிடமுடியாத விளைவுகளை கொண்டிருக்கக்கூடிய ஒரு போருக்கான பற்ற வைக்கும் திரியாக ஆக்கியுள்ளார்.
கார்ட்டர் உரை மற்றும் அந்த முன்மொழியப்பட்ட வரவு-செலவு திட்டக்கணக்கும் பிரதானமாக கவனம் செலுத்தியிருந்த மற்றொன்று, தென் சீனக் கடல் மோதல்களுக்கு அமெரிக்க போர் கப்பற்படையை நவீனமயமாக்குவதன் மீது குறிப்பிடத்தக்க வலியுறுத்தலுடன், “ஆசியாவின் முன்னிலை" என்ற பதாகையின் கீழ் சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ அழுத்தத்தைக் கட்டமைப்பதாகும்.
ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை பேணுவதற்கு இராணுவ படைகளை பிரயோகிப்பது மற்றும் சீனாவின் அதிகரித்த பொருளாதார அதிகாரத்தால் தனது மேலாதிக்க அந்தஸ்திற்கு வரும் எந்த அச்சுறுத்தலையும் தகர்ப்பது, சீனாவை அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு அடிபணியச் செய்வது மற்றும் அதை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரை-காலனித்துவமாக தரமிறக்குவது ஆகிய வாஷிங்டனின் நோக்கங்களைக் குறித்து கார்டர் வார்த்தைகளை மென்று முழுங்கவில்லை.
“மனிதயினத்தில் பாதியளவு மக்கள் வாழும் மற்றும் மனிதயின பொருளாதார நடவடிக்கைகளில் பாதி நடைபெறும் அங்கே பாதுகாப்பு சூழலைத் குழப்புவது ஒரு நல்ல யோசனை அல்ல" என்று சீனாவை எச்சரித்து, அந்த பாதுகாப்புத்துறை செயலர் கூறுகையில், "70 ஆண்டுகளாக நாங்கள் பாதுகாத்து வந்துள்ள அந்த பிராந்தியத்தின் ஸ்திரப்பாட்டைப் பேண" அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்றார்.
“எதிர்காலத்தில் ஒரு ஆக்கிரப்பாளராக வரும் ஒருவர் மீது ஏற்றுக் கொள்ள முடியாத செலவுகளை திணிக்க” கூடிய வகையில் வாஷிங்டன் அதன் இராணுவ கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. அது “அவ்வாறான ஒன்று ஆத்திரமூட்டும் நடவடிக்கை எடுப்பது நல்லதல்ல எனவும் அல்லது அவை அவ்வாறு செய்தால் மிகவும் வருத்தப்பட வேண்டியதாக இருக்கும் என அதனை ஆலோசிக்கவைக்கும், என்று அவர் தொடர்ந்து கூறினார்.
முழுமையான போர் என்ற வார்த்தைகளை பிரயோகித்து, கார்ட்டர் இதையும் சேர்த்துக் கொண்டார், “இந்த உள்ளடக்கத்தில், ரஷ்யா மற்றும் சீனா நமக்கு மிகவும் தொந்தரவூட்டும் போட்டியாளர்களாக உள்ளன.”
உலகளாவிய பேரழிவின் திசையில் இட்டுச்செல்லும் இராணுவ மோதல்களை தீவிரப்படுத்துவதற்கான இந்த முன்மொழிவுகள் அனைத்தும், அமெரிக்க மக்களின் ஆதரவைக் குறித்து ஒருபோதும் கவலையின்றி, ஒரு பொது விவாதம் பற்றிய தோற்றப்பாடுகூட இல்லாமல் முன்வைக்கப்பட்டு வருகிறது, அமெரிக்க மக்களோ மீண்டும் மீண்டும் இராணுவவாதம் மற்றும் போருக்கு அவர்களின் விரோதத்தை எடுத்துக்காட்டியுள்ளனர். மூன்றாம் உலக போரை நோக்கிய இந்த உந்துதல், பெரிதும் பொதுமக்களின் முதுகுக்குப் பின்னால் கட்டவிழ்ந்து வருகிறது. இதில் பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் இரண்டு பிரதான கட்சிகள் பெண்டகனது தயாரிப்புகளின் உறையவைக்கும் தாக்கங்கள் என்னவாக இருந்தாலும் மக்களுக்கு அறியச் செய்ய எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.
சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற ஜனாதிபதியான ஒபாமாவைப் பொறுத்த வரையில், அவரது பாத்திரம் அமெரிக்க இராணுவம் மற்றும் உளவு எந்திரத்திற்கு ஒரு முத்திரை குத்துவதே என்பது கார்ட்டரின் செவ்வாய்கிழமை கருத்துக்களில் சுருக்கமாக சுட்டிக்காட்டப்பட்டது. ஈராக் மற்றும் சிரியாவில் நிலைநிறுத்தப்படும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை கூடுதலாக அதிகரிக்கப்படுமா என்று வினவிய போது —அங்கேயும் இராணுவ நடவடிக்கைகளுக்கான நிதி 50 சதவீத அளவுக்கு $7.5 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில்— சாதகமானரீதியில் அவர் பதிலிறுத்தார், “[தலைமை தளபதி அலுவலகத்தின்] தலைவரும் நானும் ஒவ்வொரு முறையும் அதை செய்வதற்கு கூடுதல் தகமைகளை கோரியுள்ளோம், அவரும் சரி என்று கூறியுள்ளார், அது தொடருமென நான் எதிர்பார்க்கிறேன்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
போர் தயாரிப்புகளுக்கான பாரிய செலவுகள், பரந்த பெருந்திரளான உழைக்கும் மக்கள் மீதான வாழ்க்கை தரங்கள், வேலைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான முன்பினும் அதிக கடுமையான தாக்குதல்களைக் கொண்டு செலுத்தப்பட உள்ளது. அண்மித்து $72 பில்லியனுக்கு புதிய மற்றும் இன்னும் மரணகதியிலான ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அதன் செலவுகளை அதிகரிக்கும் பெண்டகனின் முன்மொழிவில் சமூக ஆதாரவளங்கள் எந்தளவிற்கு இராணுவவாதத்திற்கு திருப்பிவிடப்படுகிறது என்பதை காணலாம். இந்த தொகை மட்டுமே கூட 2015 இல் கல்விக்கான ஒட்டுமொத்த அமெரிக்க கூட்டாட்சி வரவுசெலவு திட்டக்கணக்கை விஞ்சுகிறது, இது தவிர அணுஆயுதந்தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள், குண்டுவீசிகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணைகள் ஆகியவற்றின் புதிய ரகங்களுக்காக வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாக ட்ரில்லியன் கணக்கான தொகை செலவிடப்பட உள்ளன.
ஜூலை 2014 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) “சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்" என்று தலைப்பிட்டு பிரசுரித்த அறிக்கை ஒன்று, உலக போரை நோக்கிய உந்துதலின் அடிப்படை இயக்கவியலை வரைந்து காட்டியிருந்தது, இது தான் கார்டரின் உரையில் மற்றும் பெண்டகனின் வரவு-செலவு திட்டக்கணக்கு முன்மொழிவில் வெளிப்பாட்டைக் காண்கிறது. அந்த அறிக்கை குறிப்பிட்டது:
"ஒரு புதிய உலகப் போருக்கான அபாயமானது, ஓர் பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கும் அது உற்பத்தி சாதனங்களின் தனிச்சொத்துடைமை வேர்கொண்டிருக்கும் எதிர்விரோத தேசிய அரசுகளுக்குள்ளாக பிளக்கப்பட்டிருப்பதற்கும் இடையிலானது முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை முரண்பாடுகளில் இருந்து எழுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமானது யுரேஷிய நிலப்பரப்பில், இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் ரஷ்ய மற்றும் சீனப் புரட்சிகளின் காரணத்தால் பல தசாப்தங்களுக்கு அதனால் அணுகமுடியாதிருந்த பகுதிகளில், மேலாதிக்கம் செய்வதற்கு செய்கின்ற முனைப்பில் இது மிகக் கூர்மையான வெளிப்பாட்டைக் காண்கிறது. மேற்கில், அமெரிக்காவானது, ஜேர்மனியுடன் சேர்ந்து கொண்டு, உக்ரேனை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக ஒரு பாசிசத் தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஏற்பாடு செய்தது. ஆனால் அதன் அபிலாசைகள் அத்துடன் நின்று விடவில்லை. ரஷ்ய கூட்டமைப்பை சிதறச் செய்வதும், அதன் பரந்த இயற்கை வள ஆதாரங்களை சூறையாடுவதற்கு வழியமைக்கும் வகையில் அதனை ஒரு வரிசையான அரைக்காலனிகளாக்குவதும் தான் அதன் இறுதி நோக்கம். கிழக்கில், சீனாவைச் சுற்றிவளைப்பதும் அதனை ஒரு அரைக்காலனியாக ஆக்குவதும் தான் ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவை நோக்கிய முன்னிலையின் நோக்கமாக அமைந்துள்ளது. தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிழிந்தெடுக்கப்படுகின்றதும் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு ஜீவநாடியானதுமான உபரி மதிப்பின் முக்கியமான உலக ஆதாரங்களில் ஒன்றாக இருக்கும் மலிவு உழைப்பின் மீது மேலாதிக்கத்தை உறுதிசெய்வது தான் இங்கே அதன் நோக்கமாக இருக்கிறது.”
முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முடிவு கட்டி சோசலிசத்தை ஸ்தாபிக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீடு இல்லையென்றால் ஓர் ஏகாதிபத்திய உலக போர் தவிர்க்கவியலாதது என்பதை உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் புறநிலை மூலக்காரணங்கள் உறுதிப்படுத்துகின்றன என்பதை ICFI விவரித்தது. போருக்கு உந்து சக்தியாக உள்ள அதே முரண்பாடுகள் சோசலிச புரட்சிக்கான புறநிலை தூண்டுதலை வழங்கும் என்று அது வலியுறுத்தியது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு அதன் அறிக்கையை வெளியிட்டு ஒன்றரை ஆண்டுகளில், இந்த முரண்பாடுகள் கூர்மையாகி, ஒன்று மாற்றி ஒன்றாக இப்போதைய போர்களை தீவிரப்படுத்தி, மத்திய கிழக்கில் இருந்து கிழக்கு ஐரோப்பா வரையில் தெற்கு சீனக் கடல் வரையில் அபாயங்களை அதிகரிக்க மட்டுமே செய்துள்ளன, அதேவேளையில் தொழிலாள வர்க்கத்தை சிக்கனத் திட்டங்கள் மற்றும் சுரண்டலுக்கு எதிராக அதிகரித்தளவில் கடுமையான போராட்டங்களுக்குள் இழுத்து வந்துள்ளன.
அணுகுண்டுவீச்சு அழிவை அச்சுறுத்தும் ஒரு போருக்குள் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் முழுமையாக இறங்குவதற்கு முன்னதாக, உலக சோசலிச புரட்சியை தொழிலாள வர்க்கம் நடத்த வேண்டியதன் அவசியம் மனிதயினம் முகங்கொடுத்துள்ள வரலாற்று பிரச்சினையாகும். இது உலக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக நான்காம் அகிலத்தை கட்டமைக்கும் அரசியல் கடமையை மிகவும் அவசரமாக முன்னிறுத்துகிறது.