Print Version|Feedback
India steps up pressure on Nepal
நேபாளம் மீதான அழுத்தத்தை இந்தியா அதிகப்படுத்தி வருகிறது
By W. A. Sunil
5 February 2016
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையில் ஒரு சிறிய நிலப்பரப்பாக அமைந்துள்ள நேபாளத்துக்கு செய்யப்படும் பொருள் விநியோகங்கள் இந்திய ஆதரவுடன் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருவதனால் காத்மாண்டு மற்றும் புது டெல்லிக்கு இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
இந்த மாதம் நேபாள பிரதமர் கே. பி. ஒலி (K. P. Oli) இந்தியாவிற்கு வருகைதர கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பிற்கு அவர் அளித்த ஒப்புதலை திரும்பப் பெறபோவதாக, அச்சுறுத்தி உள்ளார். "சூழ்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பாமல், இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்வது தனக்கு உகந்ததாக இருக்காது" என ஜனவரி 26ம் தேதி ஒலி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
திங்கட்கிழமை, ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (CPN-UML) விளம்பரக் குழு துணைத் தலைவர் சூர்யா தாபா, "பொருளாதாரத் தடைகள் நீக்கப்படவில்லை எனில், பிரதமர் (ஒலி) இந்தியாவிற்கு பதிலாக சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்" என அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தடை தொடர்பாக தனக்கு எவ்வித சம்பத்தமும் கிடையாது என இந்தியா மறுத்து வருகிறது, அது ஆகஸ்ட் மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேபாளத்தின் அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யக் கோரி நேபாளத்தின் சமதரையான தெற்கிலுள்ள மதேஷ் பிராந்திய மதேஷி கட்சிகளினால் நடத்தப்படும் கிளர்ச்சியின் விளைவே என்பதை வலியுறுத்துகிறது. ஐக்கிய ஜனநாயக மதேஷி முன்னணிக் கட்சி (UDMF) பாராளுமன்றத்தில் மதேஷுக்கு (அல்லது டெராய்) பெரும்பான்மை பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும் என்ற தனது கோரிக்கை குறித்து ஒரு எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தியது.
செப்டம்பர் மாதம் முதலாக, மதேஷி ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதில் நேபாள போலீஸ் குறைந்தபட்சம் 55 பேரை கொன்றுவிட்டது. ஜனவரி 21ம் தேதி, டெராயில் ஒலி உரையாற்ற இருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (CPN-UML) கூட்டத்தை சீர்குலைக்க முனைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு மூன்று ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் சுட்டு வீழ்த்தியது.
தடை காரணமாக எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கனிசமான அளவு மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால், மருத்துவமனைகள், போக்குவரத்து மற்றும் மின் உற்பத்தி போன்றவை மிகவும் பாதிப்படைந்தன. போக்குவரத்து பற்றாக்குறையினால் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.
நாட்டு மக்களின் அனைத்து பிரிவினரின் "நியாயமான அபிலாஷைகளை" நிவர்த்தி செய்யும் வகையில், அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவர காத்மாண்டு ஆளும் உயர்மட்டத்தினரிடம் கோரிக்கை வைத்து, கிளர்ச்சிகள் செய்யும் மதேஷி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஊக்கமளித்து, இந்தியா மறைமுக ஆதரவு அளித்து வருகிறது.
இந்தியாவிலிருந்து வரும் பாரிய அழுத்தத்தின் காரணமாக, மாகாணங்களில் ஒரு மறு எல்லை வரையறை, மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் தொகுதி நிர்ணயிப்பு மற்றும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் போன்ற மதேஷியின் மூன்று அடிப்படைக் கோரிக்கைகளுக்கு நேபாள அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. கடந்த வாரம் பாராளுமன்றம் இந்த அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்றியது, ஆனால் காத்மாண்டு கையாளும் விதமான ஓட்டைகளை அவைகள் கொண்டுள்ளதாகத் தெரிவித்து மதேஷி கட்சிகள் அவற்றை நிராகரித்து விட்டன.
அரசியலமைப்பில் "உரிய திருத்தங்கள்" செய்வது குறித்த புது டெல்லியின் ஆதரவிலான தொடர்ந்த வலியுறுத்துதலுடன், பிராந்திய உயரடுக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் மதேஷி கட்சிகள் அதிக சலுகைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
அமெரிக்க ஊக்கமளிப்புடன் நிகழ்ந்த இந்தியாவின் தலையீட்டினால், பெருமளவில் அதிகரித்துவிட்ட அரசியல் நெருக்கடியில் ஒலியின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் எந்தமாதிரி இருக்கவேண்டும் என்பது தொடர்பாக குழப்பமான சங்கேதங்களை நேபாள அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது. மதேஷி மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்துவது புது டெல்லியின் அக்கறையல்ல, ஆனால் நேபாளத்தில் அதன் புவிசார் -அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக நிறுவுவதே ஆகும். நேபாளத்தில் சீனாவின் வளர்ந்துவரும் செல்வாக்கை கவிழ்ப்பதற்காக இந்திய அரசாங்கம் மதேஷி கட்சிகளின் வகுப்புவாத அரசியலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசாங்கம் நேபாளத்தில் "போதுமான விரைவுடன்" தலையிடவில்லை என்றும், அதனால் அது தற்போது அதிகளவு சீனாவை நோக்கி தள்ளப்படுகிறது என்று இந்தியாவின் ஆளும் உயர்மட்டத்தைச் சார்ந்த பிரிவுகள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தி உள்ளன. டிசம்பர் 29ம் தேதி, இந்தியாவின் வெளியுறவு பாராளுமன்ற நிலைக் குழு நேபாளம் மீதான அரசாங்கத்தின் கொள்கை பற்றி வெளியுறவு செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பியது.
"தெற்கு ஆசிய பகுதியில் பெருகிவரும் சீனாவின் செல்வாக்கிற்கு வாகனமாக நேபாளம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது மற்றும் நேபாளத்துடன் இந்தியாவின் கூட்டுக்கள் கசப்பளிக்கிறது" என ஒரு குழு உறுப்பினர் ஹிந்துவுக்கு தெரிவித்தார். இது "தெற்கு ஆசிய பிராந்தியத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு ஒரு எதிர்மறையான செய்தியாக அனுப்பப்பட்டுவிடும்".
மலைப்பாங்கான நிலப்பரப்பின் ஊடாக சீனாவிலிருந்து பொருட்களின் விநியோகத்தை பெறுவது கடினமாக உள்ளபோதும், அக்டோபரில் சீன நிறுவனம் ஒன்றுடன் பெட்ரோலியம் இறக்குமதிக்கான ஒப்பந்தத்தில் காத்மாண்டு கையெழுத்திட்டுள்ளது. இந்த வகையில் புது டெல்லியின் அழுத்தத்தை எதிர்கொள்ள காத்மாண்டு முனைந்து கொண்டிருந்ததும், சீனா அதன் உறவுகளை உறுதிபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக் கொண்டதும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிரூபணமாகியது.
சீனாவுடனான மூலோபாய போட்டி மனப்பான்மை இந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களின் விவாதங்கள் மற்றும் கணிப்புக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. "நேபாளத்தில் வளர்ந்துவரும் எதிர்மறை உணர்வுகளுடன் இந்தியா போராடிக் கொண்டிருக்கும் வேளையில், சீனா நேர்மறை உணர்வுகளை நன்கு அறுவடை செய்து வருகிறது" என இந்திய பாதுகாப்பு அமைச்சரக ஆதரவுடன் வந்த ஒரு பகுப்பாய்வு சிந்தனையாளர் (பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் - IDSA) நிஹார் ஆர்.நாயக் சமீபத்தில் எச்சரித்தார்.
இது தெற்கு ஆசிய அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு எல்லைக்குள் நேபாளத்தை இணைத்துக்கு கொள்வது பற்றிய ஒரு பிரச்சினை அல்ல. சீனாவின் மீது ஆக்ரோஷமான இராணுவ சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ள வாஷிங்டன் உடன் இந்தியா ஒரு மூலோபாய கூட்டினை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே சீனாவின் அடிவயிற்றுப் பகுதியில் நேபாளம் ஒரு நெருக்கடி அமைவாக இருப்பதாக மற்றும் பெய்ஜிங்கை பலவீனப்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் கருதுகிறது.
ஒபாமா நிர்வாகம், சீன பிராந்தியப் பகுதியைச் சார்ந்த அனைத்து நாடுகளையும் "ஆசியாவை நோக்கிய முன்னிலை" என்ற அதன் சீனா எதிர்ப்பில் சிக்க வைக்க முனைந்து கொண்டிருக்கிறது. இந்திய நிலைப்பாட்டின் எதிரொலியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் ஆன்டனி பிளிங்கென் ஜனவரி 22ம் தேதி, "அனைத்து நேபாளிகளின் நன்மைகளை பிரதிநிதித்துவம் செய்யும் விதமாக மற்றும் அரசியல் முட்டுக்கட்டைகளை சரிசெய்ய உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்படி" ஒலியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் இந்த தொடர்ந்த நிலைப்பாட்டை எதிர்கொள்ள சீனா நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவின் அழைப்பினை ஒலி அறிவித்த அதே நாளில், நேபாளத்தின் சீன தூதர் வு சௌண்டாய் ஒலிக்கு அழைப்பு விடுத்தார். பெய்ஜிங் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஒலிக்கு ஒரு போட்டி அழைப்பினை வு விடுத்தார்.
2014ல் சீனா, நேபாளத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக இருந்த இந்தியாவின் இடத்தைப் பிடித்துக் கொண்டது. ஜுலை முதல் டிசம்பர் 2014 வரையிலான இடைப்பட்ட காலத்திற்குள், நேபாளத்தில் சீன முதலீடுகளின் மதிப்பு 174 மில்லியன் டாலரை எட்டியது, இது மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 60 சதவீதத்திற்கும் கூடுதலானது என கணக்கிடப்பட்டது என்று நேபாள தொழில் துறை அறிவிப்பு தெரிவிக்கிறது. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய முதலீட்டு ஆதாரமாக இருந்தபோது, 2011ல் ஏற்புடைய மாதங்களில் இருந்த வெளிநாட்டு முதலீட்டின் மதிப்பான 55 மில்லியன் டாலரிலிருந்து மூன்று மடங்காக சீன முதலீடு வளர்ச்சி கண்டிருந்தது.
"பூகோள ரீதியாக இந்தியாவின் இடத்தை சீனா பிடிப்பது சாத்திமற்றது என்ற நிலையில் இந்தியா உடனான உறவுகளின் இழப்பினை நேபாளத்தினால் சமாளிக்க இயலாது, ஆனால், புது டெல்லி உடனான அதன் கொள்கையின் மொத்த விளைவாக நேபாளத்தின் சீனா நோக்கிய சாய்வானது ஒருபோதும் வரவேற்கத்தக்கதல்ல" என்பது நேபாள எழுத்தாளர் கானக் மணி தீக்ஷித்தின் கூற்று என தெற்கு சீனா மார்னிங் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
"இந்தியா உடனான நேபாளத்தின் உறவு நேருக்கு நேரான வழிமுறையாக உள்ள சூழ்நிலையில், நேபாளம் ஒரே இரவில் தன்னை சீனா-சார்பு கொண்டதாக மாற்றிக் கொள்ளாது. ஆனால், தெற்காசிய புவிசார் அரசியலில் இது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக உள்ளது." என தீக்ஷித் மேலும் கூறினார்.
சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் தீவிர ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் வாஷிங்டனின் கூட்டாளியாக இந்தியாவை அணிதிரட்டுதல் போன்றவற்றின் மற்றொரு வெளிப்பாடாகவே நேபாள நெருக்கடி உள்ளது. இந்த உந்துதல் புவிசார் அரசியல் பதட்டங்களை மேலும் ஆழப்படுத்துவதுடன், மலைப்பாங்கான நேபாளம் உட்பட்ட தெற்கு ஆசியப் பகுதிகள் முழுவதிலும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையையும் அதிகரித்துவருகிறது.