logo
தமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள் மீதான நம்பிக்கையை காட்டுகிறது

தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு            திரு. . நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில் அமைவது, தமிழக மக்களின் ஆரோக்கியம், தமிழக மக்களின் நலன் குறித்து அவர் கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது. குறிப்பாக, சங்கம் வளர்த்த மதுரையில் அமைய இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களும், பாமரர்களும், சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையில் முக்கிய பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் , அதிகாரிகளும் சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் நமது போற்றுதலுக்குரிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. . சுஷ்மா ஸ்வராஜ் அவர்களும் சிக்கலான சிறுநீரக அறுவை சிகிச்சையை எய்ம்ஸ்ஸில் தான் எடுத்துக்கொண்டார்கள். எய்ம்ஸ் மருத்துவமனையில் பாமரர்களுக்கும், பிரமுகர்களுக்கும் ஒரே மாதிரியான, தரமான சிகிச்சை வசதிகள் கிடைக்கிறது என்பது இதிலிருந்து உறுதியாகிறது. எய்ம்ஸ் என்ற மத்திய அரசு மருத்துவமனையில் யார் வேண்டுமானாலும் நம்பிக்கையுடன் தரமான சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை நிலவுகிறது.

இப்படிப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் துவங்கப்பட இருப்பது மிகுந்த மகிழ்ச்சியான செய்தியாகும். இதற்கு முன் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில், தமிழக மக்கள் நலனிற்காகவும், தமிழக மக்களின் ஆரோக்கியத்திற்காகவும் இது போன்ற எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதன் மூலம் தென் தமிழகத்தின் 18 மாவட்டங்கள் பயன் பெறும். 1500 கோடியில் அமையப் பெறும் இந்த மருத்துவமனையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த  மருத்துவ சேவை கிடைக்கப்பெறும். 900 படுக்கைகளுடன் அமையப்பெறும் இம்மருத்துவமனையில், 100 படுக்கைகள் அவசர சிகிச்சைக்கென மட்டுமே ஒதுக்கப்படும். இதுவரை தென்னிந்தியாவில் பேர் சொல்லும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவமனைகளும் உருவாக்கப்படவில்லை என்ற நிலையிலிருந்து மாறி, எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது மதுரையில் அமைய இருப்பது, நமது பிரதமர் தமிழகத்தின் மேலும், தமிழக மக்களின் நலனிலும், தென் தமிழகத்தின் முன்னேற்றத்திலும் கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.

 

தமிழக மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள மத்திய பா.ஜ.க அரசின் திட்டத்தை ஏற்று, சில தடங்கல்களை நீக்கி   இம்மருத்துவமனை மதுரையில் அமைய ஒப்புதல் அளித்துள்ள நமது தமிழக முதல்வர் அவர்களுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல, தமிழர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள மரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் திரு. . நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. நட்டா அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர்