டார்ஜீலிங்கில் விரைவில் அமைதி திரும்பும்: மம்தா நம்பிக்கை
By DIN | Published on : 12th July 2017 04:40 AM | அ+அ அ- |
மேற்கு வங்கத்தில் தனிமாநிலம் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள டார்ஜீலிங் மலைப் பகுதியில் விரைவில் அமைதி திரும்பும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
திகா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
டார்ஜீலிங் பற்றி எரிவதை அனுமதிக்க மாட்டோம். போராட்டம் நடைபெற்றுவரும் மலைப் பகுதியில் விரைவில் அமைதி நிலைநாட்டப்படும். அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். டார்ஜீலிங் இக்கட்டான நிலையில் இருப்பதற்குக் காரணம் மத்தியில் ஆளும் பாஜகதான்.
டார்ஜிலிங்கில் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டால் சுகாதாரத்துக்குத்தான் கேடு. அமைதி ஒன்றே எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு. போராட்டக்காரர்கள் அமைதியை தேர்வு செய்ய வேண்டும் என்றார் மம்தா.
ஜூலை 15 முதல் உண்ணாவிரதப் போராட்டம்: இந்நிலையில், டார்ஜீலிங்கை தனிமாநிலமாக்கக் கோரி நடைபெற்றுவரும் முழு அடைப்புப் போராட்டத்துடன், வரும் 15- ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினர் தெரிவித்தனர்.
டார்ஜீலிங்கில் ஆதரவு கட்சிகளுடன் ஜிஜேஎம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது. அப்போது, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிரதமருக்கு அறிஞர்கள் கடிதம்: இதனிடையே, கோர்க்காலாந்து விவகாரத்தால் கலவர பூமியாக காட்சியளிக்கும் டார்ஜீலிங்கில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
சாகித்ய அகாதெமி விருது வென்ற எழுத்தாளர்கள் சிர்ஷேந்து முகோபாத்யாய, திவ்யேந்து பாலித், கர்நாடக இசைக்கலைஞர் அஜய் சக்கரவர்த்தி, ஓவியர்கள் கணேஷ் ஹலுய், வாசிம் கபூர், நடிகர் ரஞ்சித் மல்லிக் உள்ளிட்டோரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அற்பமான காரணங்களை முன்வைத்து, கோர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கை மீண்டும் எழுப்பப்பட்டு வருகிறது. டார்ஜிலிங் மலைப்பகுதிகளைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர், இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் செயல்களால் டார்ஜீலிங் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டார்ஜீலிங்கில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.