இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் எல்லை தாண்டும் மீனவர்களை சுடுவதற்கான அதிகாரம் இலங்கை இராணுவத்தினருக்கு உண்டு என தெரிவித்திருந்தார்.
இந்திய மீனவர்கள் 600க்கும் மேற்பட்டோரை இலங்கைக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
2011ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்கு இந்திய மீனவர்கள் சிலர் ஆயுதங்களை வழங்கி வந்தனர்.
அவ்வாறு ஆயுதங்கள் வழங்க இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் மீனவர்களே சுடப்பட்டிருக்கின்றனர், 2011ம் ஆண்டுக்கு பின்னர் எவ்வித துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை.
இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறாமல் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடந்திருக்காது.
அத்துமீறிவிட்டு மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுவதில் நியாயமில்லை.
ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே அவர்கள் இருந்திருந்தால் எவ்வித துப்பாக்கிச் சூடும் நடந்திருக்காது.
என் வீட்டுக்குள் யாராவது அத்துமீறி நுழையும்போது அவரை நான் சுட்டால் என் நாட்டின் சட்டதிட்டம் அதை ஏற்றுக்கொள்ளும்.
மீனவர் பிரச்சினைக்கும் இது பொருந்தும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கருத்துக்கள் தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து கடந்த 3ம் திகதி கொழும்பில் மீனவ தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்துப் பேசிய இலங்கை ஜனாதிபதி இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்க வேண்டும் என்றும் கடற்படைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இலங்கைக் கடற்பரப்பினுள் அத்து மீறும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகைச்சுவைக்காவே தெரிவித்ததாக சுட்டிக்காட்டியிருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை கடற்பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என உலகத்தில் எந்த தலைவரும் சொல்லாத கருத்தினை தெரிவித்துள்ளார் எனவும்,
பிரதமரின் கருத்திற்கு முன்னாள் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கருத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் காணப்படுகின்றது எனவும்,
தமிழக மீனவர்களை இலங்கை அரச தலைவர்கள் துச்சமாக எண்ணுகின்றனர் எனவும் இராமேஸ்வரம் மீனவர் பிரதிநிதி ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை கேள்விகுறியாக்கிய இப்பிரச்சினைக்கு இந்தியாவின் வலிமையான பிரதமர் என கூறப்படும் நரேந்திர மோடி நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.